அதிமுக வேட்பாளர் பட்டியலில் 4 டாக்டர்கள், 16 வழக்கறிஞர்கள்- மொத்தம் 40 பேரில் 36 பட்டதாரிகள்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 4 டாக்டர்கள், 16 வழக்கறிஞர்கள்- மொத்தம் 40 பேரில் 36 பட்டதாரிகள்

Published on

அதிமுக வேட்பாளர் பட்டியலில் 4 டாக்டர்களும் 16 வழக்கறிஞர்களும் இடம் பிடித்துள்ளனர். அறிவிக்கப் பட்ட 40 பேரில் 36 பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் 40 பேரை முதல்வர் ஜெயலலிதா திடீரென தனது பிறந்தநாளில் வெளியிட்டார். இந்த வேட்பாளர் பட்டியலைப் பொருத்தவரை பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

6 பேருக்கு வாய்ப்பு மறுப்பு

இப்போதைய எம்.பி.க்களில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (தென்சென்னை), கே.குமார் (பொள்ளாச்சி), சிவசாமி (திருப்பூர்), ஓ.எஸ்.மணியன் (மயிலாடுதுறை), எஸ்.செம்மலை (சேலம்), கே.எம்.ஆனந்தன் (விழுப்புரம்) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

ஆனால் தம்பிதுரை (கரூர்), பி.வேணுகோபால் (திருவள்ளூர்), பி.குமார் (திருச்சி) ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்திலும் கட்சிப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்கப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.

4 டாக்டர்கள், 16 வக்கீல்கள்

அதிமுக வேட்பாளர் பட்டியலில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட 40 வேட்பாளர்களில் 36 பேர் பட்டதாரிகள். ஒருவர் பட்டயதாரி. எம்.பி.பி.எஸ். டாக்டர்கள் 4 பேரும் அதிகபட்சமாக 16 வழக்கறிஞர்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பி.எச்டி, எம்.பில் பட்டம் பெற்ற தலா ஒருவரும் வேட்பாளர்களாகி உள்ளனர்.

முன்னாள் அமைச்சர் மகன்

சென்னையைப் பொருத்த வரை, வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களில் அதிகம் பரிச்சயம் ஆனவர் வடசென்னை தொகுதி வேட்பாளர் டி.ஜி. வெங்கடேஷ்பாபு. வடசென்னை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளராகவும், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். இவர் 2001-ம் ஆண்டில் கவுன்சிலராகவும், வார்டு குழு தலைவராகவும் (மண்டலம் 7) பதவி வகித்துள்ளார். 2006 சட்டமன்றத் தேர்தலில் புரசைவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

தென்சென்னை வேட்பாளரான டாக்டர் ஜெயவர்தன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரின் மகன். மீனவர் சமுதாயத்துக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சியில் ஓரங்கட்டப்பட்டிருந்த டி.ஜெயக்குமாரின் மகனுக்கு தேர்தலில் சீட் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சென்னை வேட்பாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், வழக்கறிஞர். அதிமுக மாணவர் அணி செயலாளராகவும் இருந்து வருகிறார். தேர்தல் ஏற்பாடுகளை சிறப்பாகக் கவனித்து வருவதால் மேலிடத்தின் கவனத்தை கவர்ந்திருக்கிறார் என்று கட்சியினர் கூறுகின்றனர். மேலும் சிந்தாமணி கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவராகவும் இருக்கிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in