ஆந்திராவில் துப்பாக்கிச் சண்டை: 3 குழந்தைகள், பெண் மீட்பு

ஆந்திராவில் துப்பாக்கிச் சண்டை: 3 குழந்தைகள், பெண் மீட்பு
Updated on
1 min read

புத்தூரில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் பதுங்கியிருந்த வீட்டில் இருந்து 3 குழந்தைகள், ஒரு பெண் ஆகியோரை பாதுகாப்பாக போலீஸார் மீட்டனர்.

கடைசியாகக் கிடைத்தத் தகவலின்படி, வீட்டில் பதுங்கியுள்ளவர்களுடன் போலீஸார் பேச்சு நடத்திவருவதாக தெரிகிறது.

பா.ஜ.க. பொதுச் செயலாளர் சேலம் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சிலருடன் ஆந்திர மாநிலம் புத்தூரில் காவல்துறையினர் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆடிட்டர் ரமேஷ், வேலூர் இந்து முன்னணி பிரமுகர் வெள்ளையப்பன் உள்ளிட்ட நான்கு முக்கிய அமைப்புத் தலைவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்குத் தொடர்பாக தேடப்பட்டு வந்த போலீஸ் பக்ருதீன் 34, என்பவரை சென்னையில் போலீசார் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபு பக்கர் ஆகியோரை பிடிக்க தமிழக போலீசார் ஆந்திரா விரைந்தனர்.

புத்தூரில், ஒரு வீட்டில் சிலர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அந்த வீட்டினை சுற்றி வளைத்து தமிழக போலீசார் ஆந்திர போலீசாருடன் இணைந்து துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டனர்.

துப்பாக்கிச் சண்டையில் தமிழக காவல்துறை ஆய்வாளர் உள்பட 2 பேர் காயமடைந்துள்ளனர். தமிழக போலீசார் ஆந்திர போலீசாருடன் இணைந்து தீவிரவாதிகள் பிடிக்க கடும் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக சிறப்புப் படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். நிலைமையை சித்தூர் எஸ்.பி., கிரந்தி ராணா டாடா கண்காணித்து வருகிறார்.

துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளுக்கு, மதுரை பைப் வெடிகுண்டு வழக்கில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in