

தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பெண்களை கைது செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநிலம் முழுவதும் மதுக்கடை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பாக பெண்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்து வந்தது. இந்தச் சூழலில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் தேசிய, மாநில நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த மதுபானக் கடைகள் மூடப்பட்டன.
மூடப்பட்ட மதுபானக் கடைகளை வேறு இடத்தில் திறக்க டாஸ்மாக் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிராக மாநிலம் முழுவதும் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு இடங்களில் புதிய கட்டிடங்களில் திறக்கப்பட்ட மதுபானக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். அங்கிருந்த மதுபானங்களை தரையில் கொட்டி அழித்துள்ளனர். சில இடங்களில் மதுபான கடைகளுக்கு தீ வைத்து வன்முறையில் இறங்கியுள்ளனர். போராட்டங்களில் வன்முறையில் ஈடுபடும் பெண்களால் அரசுப் பணம் விரயமாகிறது. இருப்பினும் பெண்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுப்பதில்லை.
மதுபானக் கடைகளை மூட வேண்டும் என்றால் முதலில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். ஆட்சியர் நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம். அதை செய்யாமல் வன்முறையில் ஈடுபடுவது சரியல்ல. எனவே மதுபான கடைகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் பெண்களை கைது செய்யக்கோரி மே 3—ம் தேதி தலைமைச் செயலர், உள்துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் மதுபானக் கடைகளுக்கு எதிராக வன்முறை போராட்டத்தில் ஈடுபடும் பெண்களை கைது செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் அமர்வில் இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் போராடும் பெண்களைக் கைது செய்யக்கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியது தொடர்பாக பெண்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.