காவல்துறை செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன: முத்தரசன்

காவல்துறை செயல்பாடுகள் கவலை அளிக்கின்றன: முத்தரசன்
Updated on
1 min read

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் கூறுகின்றார். அவர் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் செயல்பாடுகள் கவலைத் தரத்தக்கதாக உள்ளது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பொறியியல் பட்டதாரி, 24 வயதுடைய இளம் பெண் சுவாதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுவரையில் கொலையாளிகள் பிடிபடவில்லை.

சேலம் மாவட்டம் இளம் பிள்ளையை அடுத்துள்ள இடங்கணசாலை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி அண்ணாத்துரை மகள் வினுப்பிரியா (24)பி.எஸ்.சி படித்த பட்டதாரி, தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். பெற்றோர்கள் திருமண ஏற்பாடுகள் செய்திட்ட காரணத்தால் பணிக்கு செல்லவில்லை. வினுப்பிரியாவின் படத்தை ஆபாசமான முறையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரி, துணை அதிகாரி, ஆய்வாளர் என புகார் அளித்து, நடவடிக்கை கோரியுள்ளனர். சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்த புதிய செல்போன் வாங்கித் தரும்படி லஞ்சம் கேட்டுள்ளனர். அதனையும் அண்ணாத்துரை வாங்கிக் கொடுத்துள்ளார். நடவடிக்கை இல்லை, மீண்டும் மீண்டும் வினுப்பிரியாவின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறை நடவடிக்கை எடுக்காதது, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டது, மீண்டும்,மீண்டும் தான் அவமானப்படுத்தப்படுவது போன்ற காரணங்களால், இச்சமூகம் தன்னை வாழ வைக்காது என்று கருதி தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் இக்கொடிய சம்பவம் நடைபெற்று இருக்காது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது. போராட்டம் நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முற்றுகை இட்ட பின்னர் மாவட்ட காவல்துறை அதிகாரி (எஸ்.பி) அமித்குமார் சிங் நடவடிக்கை எடுப்பதாக கூறி நடந்த தவறுக்காக பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வேலூர் சிறையில் காவலராக பணிபுரியும் மூர்த்தி, தனது உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம், பத்து தினங்கள் விடுப்பு கோரியுள்ளார். தனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனவும் கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் விடுப்பு அனுமதிக்கு ரூ.2000 லஞ்சம் கேட்டுள்ளார். காவல் துறையில் பணிபுரிபவர்களே தங்கள் மேல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடக்கும் எனில் பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு லஞ்சம் இல்லாமல் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவேன் என முதல்வர் கூறுகின்றார். அவர் பொறுப்பு வகிக்கும் காவல்துறையின் செயல்பாடுகள் கவலைத் தரத்தக்கதாக உள்ளது. இந்நிலையிலிருந்து மாறிட தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in