ரூ.520 கோடி டெண்டர் முறைகேடு: ராம மோகன ராவ் மீது சிபிஐ-யிடம் புகார் மனு - அறப்போர் இயக்கம் அளித்தது
தமிழக முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவ், ரூ.520 கோடி மதிப்புள்ள டெண்டரை தம் பதவியை துஷ்பிரயோகம் செய்து தமக்கு நெருங்கிய நிறுவனத்துக்கு அளித்ததாக அறப்போர் இயக்கம் சிபிஐ-யிடம் புகார் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் நேற்று மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-க்கு அளித்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள தாவது:
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்ககம் தமக்குக் கீழ் வரும் 20 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 37 அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றில் பாதுகாப்பு, துப்புரவுப் பணிகளை தனியார் நிறுவனத்துக்கு ஒப்பந்த முறையில் அளிக்க முடிவு செய்தது. தமிழ்நாடு மருத்துவச் சேவை நிறுவனம் டெண்டரை வெளியிட்டு ஒப்பந்ததாரர்களை அழைத்தது.
‘பத்மாவதி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் பெசிலிட்டி மேனேஜ்மென்ட் சர்வீசஸ்’ என்ற நிறுவனம் டெண்டர் கோரி விண்ணப்பித்தது. இந்நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான பாஸ்கர் நாயுடு கனுமுரி, முன்னாள் தலைமைச் செயலர் ராம மோகன ராவின் மகன் விவேக் பாபி செட்டியின் ஸ்வேன் பெசிலிட்டி நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
ராம மோகன ராவ், தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் இயக்குநர் அபூர்வா உடன் கூட்டுச் சதி செய்து பத்மாவதி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சாட்சிக் கையெழுத்திட்டவர் ராம மோகன ராவின் சகோதரர் சீனிவாச ராவ். இந்த ஒப்பந்தத்தின் ஒருவருட மதிப்பு ரூ.129 கோடியாகும். 4 வருடங்களுக்கு நீட்டிப்புச் செய்யப்படக் கூடிய இதன் மொத்த மதிப்பு கிட்டத்தட்ட ரூ.520 கோடியாகும்.
எனவே, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ராம மோகன ராவ், அபூர்வா மற்றும் பிற அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும். அத்துடன், இந்த ஊழலில் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மாநில சுகாதாரத் துறை செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் பங்களிப்பையும் சிபிஐ விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த டெண்டரை ரத்து செய்துவிட்டு புது டெண்டர் கோர வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
