ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் 91,308 பேர் இணைந்தனர்

ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் 91,308 பேர் இணைந்தனர்
Updated on
1 min read

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த 91,308 பேர் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி அதிமுகவில் ஆயிரக்கணக்கானோர் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது.

அதிமுகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:

''கடந்த காலங்களில் திமுக, மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் , தேமுதிக, காங்கிரஸ் போன்ற பல்வேறு கட்சிகளில் பணியாற்றிவந்த 91,308 பேர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

அதிமுகவில் இணைந்து பொதுவாழ்வைத் தொடர இருப்பவர்களுக்கு அதிமுக மாபெரும் அரசியல் பயிற்சிக்களமாக இருக்கும். தமிழகத்தில் எனது தலைமையிலான அதிமுக அரசின் மக்கள் நலப் பணிகளைக் கண்டு அவற்றால் பயனடைந்து தொடர்ந்து ஏராளமானோர் பலர் அதிமுகவில் இணைகின்றனர். மாநிலம் தாண்டி மக்கள் நலத் திட்டப் பணிகள் நாடு முழுவதும் பேசப்படுகிறது.

வட இந்தியாவில் மாநிலத்தில் அம்மா உணவகம் போல உணவகங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஏராளமான மக்கள் நலப் பணிகள் செய்து முடிக்கும் ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் மகத்தான வெற்றிக்கு பாடுபட வேண்டும்.

அதிமுகவில் இணைந்தவர்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன'' என்று முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

தமாகாவைச் சார்ந்த திருச்சி சாருபாலா தொண்டைமான், திமுகவைச் சார்ந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மகன் ரமேஷ், மதிமுகவைச் சார்ந்த பூவை.கந்தன், நடிகர் கஞ்சா கருப்பு, நடிகை 'பசி' சத்யா ஆகியோர் அதிமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in