

ஐ.நா. சபையால் நடத்தப்பட்ட குழந்தை உரிமைகள் குறித்த உலக மாநாட்டின் 25-வது ஆண்டு விழாவையொட்டி உலக குழந்தைகளின் நிலை-2014 என்ற அறிக்கையை தமிழக ஆளுநர் கே.ரோசய்யா சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா பேசியதாவது: குழந்தை உரிமைகள் குறித்த மாநாட்டுக்கு பிறகு, குழந்தைகள் மீதான பார்வையும் அவர்கள் நடத்தப்படும் விதமும் உலக அளவில் மாற்றம் கண்டது.
யுனிசெப் எனப்படும் ஐ.நா.வின் குழந்தைகள் நிதி என்ற அமைப்பு குழந்தை பாதுகாப்பு, மேம்பாடு, கர்ப்பிணி பெண்களின் நலன், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து ஆகியவற்றில் பங்காற்றியுள்ளது.
மேலும், உலக குழந்தைகள் அறிக்கையில் குழந்தைகள் குறித்த பிரச்சினைகளுக்கு இளம் தலைமுறையினரிடமிருந்து தீர்வுகள் காணுவதன் அவசியம் குறித்தும் குழந்தைகள் தங்கள் திறமைகளை பயன்படுத்துவதற்கு தடையாக இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் பேசப்படுகிறது.
குழந்தைகளின் வளர்ச்சிக்காக புதிய முயற்சிகள் வளர வேண்டும். அதே நேரம் குழந்தைகளே புதிய முயற்சிகளில் ஈடுபடுபவர்களாக இருக்க வேண்டும். சிறு சிறு முயற்சிகள் பெரிய சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும். உலகத்தில் ஆயிரக்கணக்கான நலிந்த பிரிவை சேர்ந்த குழந்தைகள் வளர, மேம்பட இந்தியர்கள் அனைவரும் தங்களது அனுபவங்கள், கருத்துகளை பகிர்ந்து பங்காற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.