

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வில், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: விஐடி பல்கலைக்கழகத்தில் 2017-18ம் கல்வியாண்டில் பி.டெக் பொறியியல் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல் 5-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது. துபாய், குவைத், மஸ்கட் ஆகிய நாடுகளிலும், இந்தியாவில் உள்ள 119 நகரங்களில் 167 தேர்வு மையங்களிலும் கணினி முறையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வை, 2 லட்சத்து 23 ஆயிரத்து 81 மாணவர்கள் எழுதினர்.
நுழைவுத் தேர்வு முடிவு www.vit.ac.in என்ற இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. இதில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஆசிஸ் வைகர் முதலிடத்தைப் பிடித்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் திவ்யாணஸ் திரிபாதி 2-ம் இடத்தையும், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யானசு மண்டோவாரா 3-ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
விஐடி நுழைவுத் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு பி.டெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு மே 10-ம் தேதி முதல் தொடங்குகிறது.
நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வேலூர், சென்னை, போபால், அமராவதி ஆகிய இடங்களில் உள்ள விஐடி வளாகங்களில், ஏதேனும் ஒன்றில் நடைபெறும் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.
மாநில மற்றும் மத்திய கல்வி வாரியம் நடத்தும் பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் விஐடியில் பி.டெக் படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படுவர். அவர் களுக்கு 4 ஆண்டுகளுக்கு 100 சதவீதம் படிப்பில் கட்டணச் சலுகை வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்து பிளஸ் 2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் ஒரு மாணவருக்கும், ஒரு மாணவிக்கும் விஐடியில் 100 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும். மேலும், இலவச விடுதி மற்றும் உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.