

ஐடி பெண் ஊழியர் சுவாதி (24) கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப் பட்டிருந்த ராம்குமார் கடந்த 18-ம் தேதி மின்சார வயரை கடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. ராம் குமார் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ள தாலும், அவரை சார்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும், பிரேதப் பரி சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் பாய்ந் ததால் ஏற்படும் உயிரிழப்பு குறித்து தீக்காயங்கள் சிகிச்சை மற்றும் பிரேதப் பரிசோதனை செய்யும் டாக்டர்கள் கூறியதாவது:
மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் பலர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருகின்றனர். சிலரை காப்பாற்றிவிடுகிறோம். பலர் சிகிச்சை பலனின்றி இறந்து விடுகின்றனர். அதிக திறன் கொண்ட மின்சாரம் பாயும்போது உடல் உடனடியாக எரிந்து உயிரிழப்பு ஏற்படும். மின்சார விபத்துகள் தவறுதலாக நடைபெறும் நிகழ்வாகும். மின்சார வயரை பிடித்து தற்கொலைக்கு முயற்சி செய்வது என்பது மிகவும் அரிதானது.
உடலுக்குள் மின்சாரம் பாயும்போது உடலை மின் கடத்தியாகவே பயன்படுத்தி பூமிக்குள் சென்றுவிடும். எனவே மின்சாரம் உடலுக்குள் பாயும் இடத்திலும் வெளியேறும் இடத்திலும் தீக்காயங்கள் இருக்கும். ஒருவர் மின் வயரை வாயால் கடித்திருந்தால் வாய் மற்றும் மின்சாரம் வெளியேறிய கால் பாதங்களில் காயம் ஏற்பட்டிருக்கும். மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டிருந்தால், உடலின் மற்ற இடங்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கும். மின்சாரம் உடலில் பாயும்போது உறுப்புகளை செயலிழக்கச் செய்யும். முக்கியமாக இதயத்தின் செயல்பாட்டை நிறுத்திவிடும். மின்சாரத்தின் திறனைப் பொருத்து உடலும் கருப்பாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. ராம்குமார் விஷயத்தில் உண்மை என்னவென்பது பிரேதப் பரிசோதனை நடந்த பிறகுதான் தெரியவரும்.
இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.