Last Updated : 04 Oct, 2013 11:51 AM

 

Published : 04 Oct 2013 11:51 AM
Last Updated : 04 Oct 2013 11:51 AM

மோடி பிரதமர்; வைகோ தமிழக முதல்வர்! - தமிழருவி மணியன்

காந்திய மக்கள் இயக்கத்தின் நான்காவது ஆண்டு தொடக்க விழாவுக்காக மதுரை வந்திருந்த தமிழருவி மணியன், தமிழகத்தில் பா.ஜ.க., ம.தி.மு.க., தே.மு.தி.க.வைக் கொண்டு மாற்று அணியை அமைப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவரது கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள சூழலில், ‘தி இந்து’ தமிழ் நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

மூன்றாவது அணி இல்லை

தமிழகத்தில் மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. தி.மு.க., அ.தி.மு.க. என்ற தீமைகளிடம் இருந்து தமிழகத்தை மீட்பதற்கான மாற்று அணி. இதுவரையில் அமைந்த மூன்றாவது அணிகள் எல்லாம், தேர்தல் நேரத்தில் தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காமல், வெளியே தள்ளப்பட்டு, கடைசியில் வேறு வழியே இல்லாமல் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட அணிகள். அந்த அணியின் மொத்த வாக்கு வங்கி 10 சதவீதம்கூட கிடையாது என்பதால், தமிழக மக்கள் அதை உதாசீனப்படுத்தி விட்டனர்.

இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க. அணிக்கு 30 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் அணிகள் எல்லாம் சேர்த்தே 20 சதவீத வாக்கு வங்கிதான் இருக்கிறது. எனவே நான் அமைக்கிற மாற்று அணிக்கு குறைந்தது 30 சதவீத வாக்கு வங்கி இருக்க வேண்டும் என்று விரும்பினேன். மோடி பிரதமராக வேண்டும் என்று 15 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மதுவுக்கு எதிரான நடைப்பயணத்துக்குப் பிறகு பெண்கள் ஆதரவு அதிகரித்துள்ளதால், ம.தி.மு.க.வுக்கு 10 சதவீத வாக்கு வங்கி இருக்கிறது. தே.மு.தி.க.வுக்கு 10 சதவீத வாக்குகள் இருப்பது ஏற்கெனவே நிரூபணமாகி உள்ளது. எனவே, இந்த அணியை மக்கள் புறக்கணிக்க மாட்டார்கள்.

மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை

நான் மோடியை கண்மூடித்தனமாக ஆதரிக்கவில்லை. ஊழலற்ற, நிர்வாகத் திறமையுள்ள ஆட்சியை அவரால் மட்டுமே தர முடியும் என்று ஒரு நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அந்த நம்பிக்கையை, மோடி என்ற பிம்பத்தை தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க பயன்படுத்திக் கொள்ளப்பார்க்கிறேன், அவ்வளவு தான்.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, காங்கிரஸுக்கும் பா.ஜ.க.வுக்கும் அல்ல. மோடிக்கும் ராகுல் காந்திக்கும் அல்ல. மோடிக்கு போட்டி அவரேதான். மோடி வளர்ச்சியின் நாயகன் என்று பா.ஜ.க. சொல்கிறது. அவர் மதவெறி பிடித்தவர் என்று காங்கிரஸும், கம்யூனிஸ்ட்களும் சொல்கின்றனர். ஆக, நாயகனும் மோடிதான். வில்லனும் மோடிதான். இந்தியாவில் இப்படியொரு ஜனநாயகக்கூத்து நடப்பது வேடிக்கையாக இருக்கிறது. 53 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, தங்கள் சாதனையைச் சொல்லி ஓட்டுக் கேட்க முடியாதது வேதனையாக இருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே அணி…

இதே அணி சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடர வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அது சாதாரண காரியம் அல்ல. தான்தான் முதல்வராக வேண்டும் என்று விஜயகாந்த் நினைப்பார். வைகோ முதல்வராக வேண்டும் என்று அவர் நினைக்காவிட்டாலும்கூட, நாங்கள் விரும்புவோம். இந்த மாற்று அணியின் செயல்பாடு, வைகோவை முதல்வராக்குவதை நோக்கியே இருக்கும் என்றார் தமிழருவி மணியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x