

மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்க திட்ட மையத்தை தன்னாட்சி பெற்ற வளாகமாக அறிவித்திருப்பதன் மூலம் தமிழகத்தின் முதல் தன்னாட்சி பெற்ற விண்வெளி மையம் என்கிற அந்தஸ்தை பெறுகிறது மகேந்திர கிரி வளாகம்.
மகேந்திரகிரியில் இருக்கும் இஸ்ரோவின் விண்வெளி மையம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கேரளத்தில் உள்ள வலியமலா திரவ இயக்க திட்ட மையத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இதனால், தமிழகம் விண்வெளித் துறையில் பெரிய அளவில் வளர்ச்சி அடை யாததுடன், விஞ்ஞானிகளுக்கும் ஊழியர்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்பட்டன.
மேற்கண்ட விவகாரம் குறித்து ‘தி இந்து’ முதல் முறையாக செய்தி வெளியிட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடந்த விழாவில் மத்திய அமைச்சர் நாராயணசாமி, ‘மகேந்திரகிரி மையம் திரவ இயக்கத் திட்ட வளாகமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது’ என்று அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முதல் தன்னாட்சி பெற்ற விண்வெளி வளாகம் உருவாகியிருக்கிறது. இம் மையத்தின் இணை இயக்குநராக இருந்த கார்த்திகேசன் தற்போது இதன் இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இதுகுறித்து திரவ இயக்க மையத்தின் முன்னாள் பொது மேலாளர் சிவசுப்ரமணியன் கூறுகையில், “சுமார் 30 ஆண்டுகள் கழித்து சுதந்திரம் பெற்றுள் ளோம். தன்னாட்சி பெற்றால்தான் குலசேகரப்பட்டினத்துக்கு ராக்கெட் ஏவுதளத்தை கொண்டுவர முடியும். விண்வெளித் துறையில் தமிழகத்தின் வளர்ச்சி பல மடங்கு கூடும். இங்கு நிறைய விண்வெளித் துறை விஞ்ஞானிகள் உருவாவார்கள்” என்றார்.
தன்னாட்சி சந்தேகமும் விளக்கமும்!
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் அறிவிப்பில் ‘தன்னாட்சி’ என்கிற வார்த்தையே குறிப்பிட வில்லை; அதனால், உண்மையிலே தன்னாட்சி கிடைத்ததா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். ஆனால், தன்னாட்சி கிடைத்தது என்பதே உண்மை.
இதுகுறித்து பேசிய மகேந்திர கிரி வளாகத்தின் மூத்த விஞ்ஞானி ஒருவர், “தன்னாட்சி என்பது தொழில்நுட்பம் சார்ந்தும், நிர்வாகம் சார்ந்தும் இரு வகைப்படும். தொழில்நுட்ப ரீதியாக எங்கள் இயக்குநர் நேரடியாக பெங்க ளூரில் இருக்கும் இஸ்ரோவின் தலைமையகத்துக்கு அறிக்கை அனுப்பினால் போதுமானது. இதுவே எங்களுக்கு கிடைத்த தொழில்நுட்பரீதியான தன்னாட்சி.
நிர்வாக ரீதியாக எங்கள் பணி யாளர் விவரங்கள், ஊதியம் உள்ளிட்ட அனைத்தும் பொது கோப்பில் உள்ளன. அவற்றில் மகேந்திரகிரி வளாகத்தின் விவரங் களை மட்டும் வரும் மார்ச்
15-ம் தேதிக்குள் தனியாக பிரிக்க வேண்டும். இதற்கு தனி குழு அமைக்கப்படும். அவ்வாறு பிரித்த பின்பு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிர்வாக ரீதியாகவும் இந்த வளாகம் தன்னாட்சி பெறும்” என்றார்.