

சில தினங்களுக்கு முன்பு பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சென்னை மாநகர பஸ்ஸில் பயணம் செய்த நடுத்தர வயதுடைய ஆண், “அவங்களை அப்படியே…” என்று கோபத்திலும் ஆற்றாமையிலும் நறநறவென்று பல்லைக் கடித்தார்.
அந்த பஸ்ஸின் உள்ளே “தொம் தொம்” என்று இருக்கையின் பக்கவாட்டிலும், முன்னிருக்கையின் பின்புறத்திலும், கைகளால் தட்டி சத்தமாக பாட்டு பாடிக் கொண்டும், படிக்கட்டுகளில் தொங்கியபடியும் பயணம் செய்த சிலரைப் பார்த்து, ஆத்திரத்தில் வெளிப்பட்ட வார்த்தைகளே அவை.
“எனக்கொரு பொண்ணு இருக்கா சார். பஸ்ஸுல சிலர் செய்யற அத்துமீறல்கள பத்தி சொல்லுவா. நேர்ல பாக்கும்போது தான் தெரியுது. இவங்களை தட்டிக் கேட்க யாரும் இல்லை. இப்ப இந்த பஸ் உள்ளே இருக்கறவங்ககிட்ட இவனுங்க எப்படி நடந்துக்கிட்டாலும் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது” என்றார் ஆதங்கத்துடன்.
சென்னை மாநகர பஸ்களில் பெரம்பூர், திருவொற்றியூர், கடற்கரை சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, புரசைவாக்கம், ஸ்டெர்லிங் சாலை, ஆற்காடு சாலை மற்றும் ராயப்பேட்டை தடங்கள் வழியாக நாள்தோறும் பயணம் செய்வோர், பஸ்களில் நடைபெறும் அத்துமீறல்களால் நரக வேதனையை அனுபவித்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
“ஒருநாள், இருநாள் என்றால் பரவாயில்லை. தினசரி இந்த காட்டுக் கத்தலின் நடுவே பயணம் செய்ய வேண்டியுள்ளது. இளம் பெண்களை ஈர்ப்பதற்காக சிலர் செய்யும் ஹீரோயிசம், ஒட்டு மொத்த பயணிகளின் வெறுப்பு ணர்வை சம்பாதித்துத் தருவதை அவர்கள் உணரவில்லை” என்கிறார் பூந்தமல்லியில் இருந்து அமைந்தகரைவரை பயணம் செய்யும் அரசு ஊழியர் ஒருவர்.
இலவச பஸ் கச்சேரி
தொம் தொம்மென்று நமது தலையில் ஓங்கி யாரோ தொடர்ந்து அரை மணி நேரம் அடித்துக் கொண்டிருந்தால், எப்படி இருக்குமோ அதைவிட கடுமையானதாக இருக்கும் அந்த வேதனை. போலீஸ் நிலையங்களை கடக்கும்போது மட்டும் இத்தொல்லை சில விநாடிகள் ஓயும், அவற்றை கடந்த பிறகு மீண்டும் தொடங்கிவிடும். ஏனோ அரசும் போலீஸாரும் பாராமுகமாக உள்ளனர்.
எல்லா மாணவர்களும் இப்படி செய்வதில்லை. சிறிய சதவீதத்தினர் மட்டுமே இவ்வாறு செய்கின்றனர். ஆனால், பல ஆண்டுகளாக இது தொடர்ந்து நடக்கிறது” என்கிறார் பெரம்பூரில் இருந்து பஸ்ஸில் தினசரி பயணம் செய்யும் அரசு பெண் ஊழியர் ஒருவர்.
இதுபோன்ற சிலரின் தவறான போக்கால், சாலையில் கவனம் செலுத்தி ஓட்டவே முடிவதில்லை என்கின்றனர் ஓட்டுநர்கள். “பஸ் ஓட்டும்போது ஓடிவந்து ஏறுவதும், கம்பியைப் பிடித்துத் தொங்குவதும், மண்டையை பிளக்கும் வகையில் பஸ்ஸின் பக்கவாட்டில் தட்டி தாளம் போடுவதுமாக பெரும் தலை வலியை காலை, மாலை நேரங்களில் ஆண்டாண்டு கால மாக அனுபவித்து வருகிறோம். போலீஸாரும், அரசும் சரியான நட வடிக்கை எடுப்பதில்லை. இது ஒரு சாபக்கேடுதான்” என்கிறார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணி புரிந்து வரும் மாநகர பஸ் ஓட்டுநர்.
“கடந்த ஆண்டில் புட்போர்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் கந்தன்சாவடி அருகே விபத்தில் சிக்கி இறந்தனர். பஸ்ஸின் தானியங்கி கதவை ஓட்டுநர் மூடமுடியாமல் போனதே விபத்துக்கு காரணம். கதவை மூட முடிந்திருந்தால் உயிர்ப்பலியை தவிர்த்திருக்கலாம். என்னென்னவோ செய்து பார்க்கி றோம், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை” என்கிறார் மாநகர போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர்.
“பஸ்ஸில் பிரச்சினை கொடுப்ப வர்கள் மீது முன்பெல்லாம் போலீஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது இது வெகுவாக குறைந்துவிட்டது” என்கிறார் அயனாவரத்தைச் சேர்ந்த எக்ஸ்னோரா அமைப்பு நிர்வாகி கே.ராமதாஸ்.