

ஓசூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சமீபகாலமாக மர்மக் காய்ச்சலினால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த மர்மக் காய்ச்சலுக்கு அருமருந்தாக விளங்கும் நிலவேம்பு கஷாயம் ஓசூர் சித்த மருத்துவ மையத்தில் வழங்கப்பட்டு வருவதால் நிலவேம்பு கஷாயம் அருந்த வருபவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
ஓசூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சித்த மருத்துவப் பிரிவு இயங்கி வருகிறது. சித்த மருத்துவ மையத்தில் வழங்கப்படும் நிலவேம்பு கஷாயம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மையத்தில் காலை 8 மணியில் இருந்தே பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து, நில வேம்பு கஷாயத்தை குடித்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து ஓசூர் சித்த மருத்துவ மைய உதவி மருத்துவ அலுவலர் சுகுமாரன் கூறியதாவது: ஓசூர் சித்த மருத்துவ மையத்தில் எச்ஐவி, புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் டெங்கு காய்ச்சல், சிக்குன்குனியா காய்ச்சல், மர்மக் காய்ச்சல், பலதரப்பட்ட சரும நோய்கள், உடல் வலி, மூட்டு வலி வயிற்றுப்புண், காதுவலி, பல்வலி, பெண்களுக்கு ஏற்படும் கருப்பை கோளாறுகள் உட்பட பல்வேறு நோய்களுக்கு பக்கவிளைவு இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் இங்கு சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பல விதமான காய்ச்சல்களுக்கும் ஒரே அருமருந்தாக நிலவேம்பு கஷாயம் விளங்குகிறது. நிலவேம்பு கஷாயம் தினமும் புதியதாக தயாரித்து வழங்கப்படுகிறது. இதை 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகள் முதல் அனைவரும் அருந்தி பயன் பெறலாம்.
நிலவேம்பு கஷாயத்தை காலையில் சிற்றுண்டி சாப்பிடுவதற்கு முன் குடிப்பது சிறந்த பலனை தரும். சிறுவர்களுக்கு 25 மில்லி லிட்டரும், பெரியவர்களுக்கு 50 மில்லி லிட்டரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க கொடுக்கப்படுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த கஷாயத்தை குடிப்பது நல்லது. நிலவேம்பு கஷாயம் மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இந்த மையத்தில் மே மாதத்தில் 2,395 பேரும் நிலவேம்பு கஷாயம் குடித்து பயனடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.