Published : 15 Nov 2014 10:59 AM
Last Updated : 15 Nov 2014 10:59 AM

பொங்கல் பண்டிகைக்கு ரயிலில் முன்பதிவு: 8 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன டிக்கெட்கள்

பொங்கலையொட்டி தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி, அடுத்த 8 நிமிடங்களில் முடிந்தது. இதனால் டிக்கெட் கவுன்ட்டர்கள் முன் பல மணி நேரம் வரிசையில் காத்திருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

வரும் ஜனவரி 14-ம் தேதி போகிப்பண்டிகை, 15-ம் பொங்கல் பண்டிகை, 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ம் காணும் பொங்கல் வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால், பெரும்பாலான மக்கள் 13-ம் தேதி புறப்பட்டு சொந்த ஊருக்கு செல்வார்கள்.

இந்நிலையில், ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு தமிழகம் முழுவதும் உள்ள 180 மையங்களில் இருக்கும் சுமார் 400 கவுன்ட்டர்களில் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. குறிப்பாக, சென்னையில் உள்ள மாம்பலம், மயிலாப்பூர், திருவான்மியூர், எழும்பூர், பெசன்ட்நகர், சென்ட்ரல் ரயில் நிலையம் உட்பட 22 மையங்களிலும் முன்பதிவு நடந்தது. முன்பதிவு தொடங்கிய, அடுத்த 8 நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களுக்கு ஜனவரி 13-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் விற்று தீர்ந்தன. இதனால், வரிசையில் நீண்ட தூரத்துக்கு காத்திருந்த ரயில் பயணிகள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

குறிப்பாக, தென்மாவட்டங் களுக்கு செல்லும் பாண்டியன், செந்தூர், அனந்தபுரி, பழனி, குருவாயூர், ராக்போர்ட், நெல்லை, பொதிகை, பெர்ல் (முத்துநகர்), கன்னியாகுமரி, மங்களூர் (திருச்சி வழியாக) ஆகிய எக்ஸ்பிரஸ் ரயில்களில் 2-ம் வகுப்புக்கான முன்பதிவு முடிந்து விட்டது.

மேலும், இந்த ரயில்களில் காத்தி ருப்போர் பட்டியல் 200 முதல் 300 வரை தொட்டது. இருப்பினும், மற்ற வகுப்பில் சில டிக்கெட்கள் காலியாக இருந்தன. பல்லவன், வைகை ரயில்களில் கணிசமாக அளவுக்கு டிக்கெட்கள் காலியாக இருந்தன.

ஜனவரி 12-ம் தேதிக்கு குருவாயூர், பாண்டியன், ராக்போர்ட், மங்களூர் உள்ளிட்ட சில எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் கணிசமாக இருந்தது. உட்கார்ந்து செல்லும் வசதி கொண்ட டிக்கெட்களும் காலியாக இருந்தன. தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் வழக்கமான விரைவு ரயில்களில் பெரும்பாலும் டிக்கெட்கள் விற்று தீர்ந்துள்ள நிலையில், தெற்கு ரயில்வே அறிவிக்கவுள்ள சிறப்பு ரயில்களுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘தென்மாவட்டங் களுக்கு வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் ஜனவரி 13-ம் தேதிக்கான முன்பதிவு பெரும் பாலும் முடிந்து விட்டது. ஒரு சில ரயில்களில் இருக்கை வசதியுடன் கூடிய டிக்கெட் இருக்கிறது. மேலும், 11, 12-ம் தேதி, 14-ம் தேதிகளில் டிக்கெட் காலியாகத்தான் இருக்கின்றன. எனவே, வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில் முன்பதிவு முடிந்த பிறகு, தான் தேவையை கருதி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்படும்’’ என்றார்.

6,500 டிக்கெட் விற்பனை

ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய அடுத்த, 8 நிமிடங்களில் தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட் வேகமாக நிரம்பியது. இதில், சுமார் 6,500 டிக்கெட்கள் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் கூறுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x