

பஸ்ஸின் படியில் தொங்கிக் கொண்டு வந்ததை தட்டிக் கேட்டதால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் பஸ் கண்ணாடியை கல்லால் உடைத்தனர். இதனால் ஒரு பெண்ணின் தலையில் காயம் ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் இருந்து அண்ணா சதுக்கத்துக்கு செவ்வாய்க்கிழமை காலையில் மாநகர பேருந்து 28எம் புறப்பட்டது. பாண்டியன் ஓட்டுநராகவும், இளையராஜா நடத்துநராகவும் இருந்தனர்.
திருவொற்றியூரில் பேருந்தில் ஏறிய கல்லூரி மாணவர்கள் படிக் கட்டில் தொங்கிக் கொண்டும், பேருந்தின் பக்கவாட்டில் தட்டி ஓசை எழுப்பி பாட்டு பாடிக்கொண்டும் வந்தனர். அந்த மாணவர்களை உள்ளே ஏறும்படி நடத்துநர் இளையராஜா கண்டித்தார். இதனால் அவருக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
வண்ணாரப்பேட்டை பழைய தபால் நிலையம் அருகே பேருந்து வந்தபோது, போக்குவரத்து நெரிசலில் பேருந்து மெதுவாகச் சென்றது. அப்போது படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவர்களை உள்ளே வரும்படி மீண்டும் நடத்துநர் இளையராஜா கூறினார்.
ஆத்திரம் அடைந்த மாணவர்கள் சிலர் மெதுவாக சென்ற பேருந்தில் இருந்து கீழே குதித்து தரையில் கிடந்த ஒரு கல்லை எடுத்து பேருந்தின் பின்பக்க கண்ணாடியில் எறிந்தனர். இதில் கண்ணாடி உடைந்து விழுந்தது.
பேருந்துக்குள் இருந்த பயணிகள் பயத்தில் அலறினர். உடைந்த கண்ணாடி வழியாக பேருந்துக்குள் இருந்த பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை எறிந்தனர்.
இதில் பேருந்துக்குள் இருந்த புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வி (32) என்பவரின் தலையில் கல் பட்டு ரத்தம் வடிந்தது. வலியில் அவர் துடித்ததை பார்த்து கல்லெறிந்த மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
பேருந்து ஓட்டுநர் பாண்டியன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்துக்கு பேருந்தை கொண்டு சென்று புகார் கொடுத்தார். செல்வியும் தனியாக ஒரு புகார் கொடுத்தார்.
பின்னர் செல்விக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.