Published : 06 Mar 2014 12:00 AM
Last Updated : 06 Mar 2014 12:00 AM

விஜயகாந்தின் கூட்டணி முடிவு: பில்லியன் டாலர் கேள்வி- ம.ம.க. மூத்த தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

தேர்தல் கூட்டணி விவகாரத்தில் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது இப்போதும் மில்லியன் டாலர் அல்ல… பில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது என்று மனித நேயமக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

திமுக உருவாக்கிய ஜனநாயக முற்போக்குப் கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை அந்தக் கட்சி தனித்துப் போட்டியிட்ட மயிலாடுதுறை தொகுதியே இம்முறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, `தி இந்து’வுக்கு பேட்டியளித்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கூறியதாவது: ``மமக-வுக்காக மயிலாடுதுறை, திருச்சி, மத்திய சென்னை தொகுதிகளைக் குறிப்பிட்டு 2 தொகுதிகளைக் கேட்டிருந்தோம். ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டதை திருப்தியுடன் ஏற்றுக்கொண்டோம். கடந்த தேர்தலில் மயிலாடுதுறையில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டே சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்றதனால், மயிலாடுதுறையை தெரிவு செய்துள்ளோம். வேட்பாளர் யார் என்பதை கட்சியின் உயர்நிலைக் குழு முடிவு செய்யவுள்ளது.

திமுக கூட்டணி ஒருங்கிணைந்த கூட்டணியாகவும், கூட்டணி தர்மத்தையும் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மரியாதையுடன் நடத்தும் கட்சியாக திமுக இருக்கிறது. அதனால்தான், தேர்தலில் போட்டியிடாமல் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கும் உழவர் உழைப்பாளர் கட்சி, சந்தானம் ஃபார்வர்டு பிளாக் கட்சி உள்ளிட்ட கட்சிகளையும் பேராயர் எஸ்றா சற்குணம், பொன்குமார் உள்ளிட்ட தலைவர்களையும் அழைத்துப் பேசி சுமூகமான சூழலை உருவாக்கி இருக்கிறார் கருணாநிதி.

இந்தத் தேர்தலை பொறுத்த வரை மதவாத சக்திகள் அதிகாரத்துக்கு வந்துவிடக் கூடாது என்பதில் எங்கள் அணி தீர்க்கமாக இருக்கிறது. இந்த நல்ல நோக்கத்தோடுதான் தேமுதிக-வையும் எங்கள் கூட்டணியில் சேர்க்க பிரயாசைப்பட்டோம். ஆனால், விஜயகாந்த் என்ன முடிவில் இருக்கிறார் என்பது மில்லியன் டாலர் அல்ல... பில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. இனிமேல் அவரைப் பற்றி நாங்கள் கருத்துக் கூற விரும்பவில்லை’’ இவ்வாறு ஜவாஹிருல்லா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x