அரசு நூலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7.5 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு: பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தகவல்

அரசு நூலகங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 7.5 லட்சம் பள்ளி மாணவர்கள் உறுப்பினர்களாக சேர்ப்பு: பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தகவல்
Updated on
2 min read

கடந்த 2 ஆண்டுகளில் அரசு நூலகங்களில் 7 லட்சத்து 50 ஆயிரம் பள்ளி மாணவ-மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர் என்று பள்ளிக்கல்வி இயக்குநரும், பொது நூலகத்துறை பொறுப்பு இயக்குநருமான எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.

‘நாஸ்காம்’ அறக்கட்டளையும், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையும் இணைந்து இந்தி யாவில் உள்ள பொது நூலகங்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மாபெரும் நூலக இயக்கத்தை தொடங்கியுள்ளன. இந்த திட்டத்தின்படி, அரசு நூலகங்களில் தகவல் தொழில்நுட்ப வசதியை கொண்டுவருவது, நூலகர்களின் திறனை மேம்படுத்த சிறப்பு பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த புதிய திட்டத்தின் தொடக்கவிழா சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் நேற்று நடை பெற்றது. அறக்கட்டளை நிறுவன ரான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் முன்னிலை யில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சி யில் மைஸ் (m-ICE) என்ற மொபைல் செய்தி சேவை செயலியை பள்ளிக் கல்வி இயக்குநரும் பொது நூலகத் துறை பொறுப்பு இயக்குநருமான எஸ்.கண்ணப்பன் தொடங்கிவைத் தார். இந்த செயலி மூலம் மாவட்ட வாரியான செய்திகள், பயிர்களுக்கு ஏற்படும் நோய்கள், பயிர் பாது காப்பு உள்ளிட்ட வேளாண் சார்ந்த தகவல்களை செல்போனில் தமிழில் தெரிந்துகொள்ளலாம். விழாவில் கண்ணப்பன் கூறிய தாவது:

கடந்த 5 ஆண்டுகளாக பொது நூலகத் துறையில் பல்வேறு புதுமை யான திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. ஒரு கிராமத்தில் மக்கள்தொகை ஆயிரம் இருந்தால் அங்கு அரசு சார்பில் நூலகத்தை ஏற்படுத்த முடியும். தமிழகத்தில் 4050 கிராமப்புற நூலகங்களும், 32 மாவட்ட நூலகங்களும் உள்ளன. இவை தவிர, சென்னை கன்னிமாரா நூலகமும், அண்ணா நூற்றாண்டு நூலகமும் பெரிய நூலகங்களாக இயங்கி வருகின்றன. கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத் யேக நூலகம் அமைக்கப்பட் டுள்ளது. நூலகங்கள் தகவல் மையங்கள் என்ற நிலையை தாண்டி வழிகாட்டும் மையங்களாக மாறியிருக்கின்றன.

அரசு நூலகங்களில் வாசகர் களின் விருப்பத்தை அறிந்தே புத்தகங்கள் வாங்கப்படுகின்றன. சென்னை கன்னிமாரா நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு தினசரி ஆயிரம் பேர் வருகின்றனர். இங்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கு படிக்கும் மாண வர்களுக்கு உதவி செய்வதற்காக தனிப்பிரிவு இயங்குகிறது. நூலகத் தில் உள்ள புத்தகங்களை மட்டு மின்றி மாணவர்கள் வீட்டில் இருந்து கொண்டுவரும் புத்தகங்களை அமர்ந்து படிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு நூல கங்கள் கல்வி நிறுவனங்கள், பொது நல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகிய வற்றுடன் இணைந்து செயல்படு கின்றன. அந்த வகையில், விருது நகர் மாவட்ட நூலகம் டிஜிட்டல் நூலக வசதி தொடர்பாக கலச லிங்கம் நிகர்நிலை பல்கலைக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. பள்ளி குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் அவர்கள் அருகேயுள்ள நூலகங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 7.5 லட்சம் பள்ளி மாணவர்கள் அரசு நூலகங்களில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

நாஸ்காம் அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலர் ஸ்ரீகாந்த் சின்ஹா பேசும்போது, “இந்தியாவில் பொதுநூலகங்கள் 1880-களில் தொடங்கப்பட்டன. லண்டனில் உள்ள நூலகங்களுக்கு இணையாக நிறுவப்பட்ட இந்த நூலகங்களில் புரொஜக்டர்கள் உள்ளிட்ட சாதனங்கள் இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்தில் பொது நூலகங்களும் முக்கிய பங்காற்றின. ஆனால், தற்போது பொது நூலகங்களின் நிலைமை குறிப்பிடும்படியாக இல்லை. பொது நூலகங்கள் தகவல்களை மட்டுமின்றி விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட சேவைகளை உள்ளூர் மக்களுக்கு வழங்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்றார்.

இந்திய பொதுநூலக இயக்கத்தின் செயல் இயக்குநர் சுபாங்கி சர்மா புதிய திட்டத்தின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். முன்னதாக, எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் செயல் இயக்குநர் வி.செல்வம் வரவேற்று அறிமுகவுரை ஆற்றினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in