Published : 12 Apr 2017 10:09 AM
Last Updated : 12 Apr 2017 10:09 AM

புதுக்கோட்டை அருகே நெய்வேலியில் ரூ.7.45 கோடியில் தடுப்பணை : விவசாயிகள் மகிழ்ச்சி

புதுக்கோட்டை அருகே நெய்வேலியில் அக்கினி ஆற்றின் குறுக்கே ரூ.7.45 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி பகுதியானது காவிரி ஆற்றுப் படுகை பகுதியாக இருப்பதால், இப்பகுதியில் கனமழை காலங்களில் கடலில் கலக்கும் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக, திருமணஞ்சேரி அருகே நெய்வேலியில்(புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களின் எல்லை) தடுப்பணை கட்ட வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதைத்தொடர்ந்து, கடந்த 2015-ல் நெய்வேலியில் அக்கினி ஆற்றின் குறுக்கே ரூ.7.45 கோடியில் தடுப்பணை கட்ட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பொதுப்பணித் துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை சார்பில் சுமார் 250 மீட்டர் நீளம், ஒரு மீட்டர் உயரத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. மேலும், மதகுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கரையை பலப்படுத்தப்படுத்தும் பணியும் நடைபெற்று வருகிறது. ஆற்றின் இரு கரைகளிலும் திருமணஞ்சேரி, கறம்பக்குடி சாலையில் இருந்து பிரிந்து தடுப்பணைக்கு செல்லும் வகையில் கிராவல் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. இந்த அணை கட்டப்பட்டுவதன் மூலம் தண்ணீரை தேக்கி வைப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து கறம்பக்குடி பகுதி விவசாயிகள் கூறியபோது, “கன மழையின்போது, அக்கினி ஆற்றின் வழியே கடலில் சேரும் தண்ணீரை, தற்போது கட்டமைக்கப்பட்டு வரும் புதிய தடுப்பணை மூலம் தேவைக்கு ஏற்ப தேக்கி வைக்க முடியும்.

அதிலிருந்து அப்பகுதியில் உள்ள ஏரி, குளங்களிலும் தண்ணீரை நிரப்பலாம். இதன் மூலம் இப்பகுதியில் நேரடியாகவும், ஆழ்துளைக் கிணறுகள் மூலமாகவும் சுமார் 500 ஏக்கரில் பாசனம் செய்யலாம்.

தடுப்பணைக்காக இருபுறமும் உயர்த்தி அமைக்கப்பட்டுள்ள கரைகளில் மண் அரிப்பு ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x