Published : 18 Mar 2014 12:00 AM
Last Updated : 18 Mar 2014 12:00 AM

கால் நூற்றாண்டுக்குப் பிறகு காங். தனித்துப் போட்டி- ஆலந்தூர் இடைத் தேர்தலில் களமிறங்குகிறது

25 ஆண்டுகளுக்குப் பின், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது. ஏப்ரல் 24-ல் நடைபெறவுள்ள ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து களமிறங்குகிறது காங்கிரஸ்.

கடந்த 1952-ல் நடந்த முதல் சட்டசபைத் தேர்தலில், ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 152 தொகுதிகளில் வென்றது. 1957 தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு 151 தொகுதிகளிலும் 1962ல் 139 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையடுத்து, பக்தவத்சலம் தலைமை யிலான காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டு 51 இடங்களைப் பெற்றது. பின்னர் முதன்முதலாக 1971-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இந்திரா காங்கிரஸ் என்றும் காமராஜர் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பு என்றும் பிரிந்து காமராஜர் தலை மையிலான காங்கிரஸ் கட்சி, ராஜாஜியின் சுதந்திராக் கட்சியுடன் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது.

பின்னர் 1977-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டு 27 இடங்களிலும், 1980-ல் திமுக-வுடன் 31 தொகுதிகளிலும், 1984-ல் அதிமுக கூட்டணியில் 61 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் 1989-ல் காங்கிரஸ் கட்சி, ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணியில் கூட்டணிக்கு முயன்றதால், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடிகர் சிவாஜி கணேசன் வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னங்கினார். இதனால் 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காங்கிரஸ் கட்சி 1989-ல், சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 26 இடங்களைப் பெற்றது. பின்னர் 1991-ல் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு 60 தொகுதி களைப் பிடித்தது.

1996 பொதுத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டு சேர எதிர்ப்பு தெரிவித்து, காங் கிரஸிலிருந்து வெளியேறிய மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸைத் தொடக்கினார். அந்தத் தேர்தலில் தமாக திமுக கூட்டணியில் அறுபது இடங்களைப் பிடித்தது; போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வி யடைந்தது காங்கிரஸ். பின்னர் 2001-ல் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கி ரஸ் ஏழு இடங்களிலும், தமாகா 23 இடங்களிலும் வெற்றி பெற்றன. மூப்பனார் மறைவுக்குப் பின் 2002- தமாகா-வை காங்கிரஸுடன் இணைத் தார் ஜி.கே.வாசன். மீண்டும் காங்கிரஸ் கட்சி 2006-ல் திமுக கூட்டணியில் போட்டியிட்டு 34 இடங்களிலும், 2011-ல் மீண்டும் திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஐந்து இடங்களி லும் வெற்றி பெற்றது.

தொடர்ந்து 9 ஆண்டுகளாக திமுக-வுடனிருந்த கூட்டணி முறிந்து, தற்போது காங்கிரஸ் கட்சி, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித்துப் போட்டியிடுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இது காங் கிரஸை பலப்படுத்த கிடைத்த வாய்ப்பு என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x