

சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையையொட்டி மணல் ஒப்பந்ததாரரான சேகர் ரெட்டி வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் கோடிக்கணக்கில் பணம் சிக்கியது. இதில் புதிய இரண்டாயிரம் நோட்டுகளும் ஏராளமாக பிடிபட்டன. இதன் மீதான விசாரணையில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரது உறவினர்கள், கூட்டாளிகள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் ஏகப்பட்ட ரொக்கம் மற்றும் தங்கம் கைப்பற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து சீனிவாசலு, பிரேம் குமார், திண்டுக்கல் ரத்தினம், முத்துப்பேட்டை ராமச்சந்திரன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
சட்ட விரோத பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
சிபிஐ காவலில் இருந்து சீனிவாசலு, சேகர் ரெட்டி, பிரேம் குமார் ஆகியோர் வெளியே வந்த போது அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில்தான் சேகர் ரெட்டி உள்ளிட்டோருக்கு இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவாதம் செலுத்தி ஜாமீன் பெறலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் டெல்லி அமலாக்கப்பிரிவில் தினமும் ஆஜராகி இவர்கள் கையெழுத்திடுவது அவசியம்.
சேகர் ரெட்டியின் கூட்டாளிகள் ராமச்சந்திரன், ரத்தினம் ஆகியோரது முன் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்தது.