ரேஷன் கடைகள் முன் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும்: ஸ்டாலின்

ரேஷன் கடைகள் முன் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும்: ஸ்டாலின்
Updated on
1 min read

ரேஷன் கடைகளில் பொருட்களை விநியோகப்பதில் இருக்கும் குழப்பத்தை ஒரு வார காலத்திற்குள் அரசு சரிசெய்யவில்லை என்றால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னால் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பொருட்கள் முறையாக கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக பாமாயில், பருப்பு போன்றவை கடந்த மூன்று, நான்கு மாதமாக சரியாக கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மற்றபடி அரிசி, சர்க்கரை தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கின்றது என்ற புகாரின் அடிப்படையில் நான் இது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தேன்.

அந்த அறிக்கைக்கு அந்த துறையின் அமைச்சராக இருக்கும் காமராஜ் அவர்களும், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூ அவர்களும் மாறி மாறி முறையான விளக்கம் சொல்லாமல் நான் இதை அரசியல் ஆக்குவதற்காக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள் அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே இன்று என்னுடைய கொளத்தூர் தொகுதியில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வுப் பணியை மேற்கொண்டேன். அப்படி மேற்கொண்ட நேரத்தில் அந்த கடைகளில் இருக்கும் ஊழியர்களிடத்தில் பேசினேன்.

பொருட்களை வாங்குவதற்கு காத்திருந்த பொதுமக்களிடமும் விளக்கமாக பேசியிருக்கிறேன். கடையில் இருக்கும் ஊழியர்கள் ஆதாரமாக ரிஜிஸ்டர் செய்யக்கூடிய நோட்டுப் புத்தகங்களை எடுத்துக் காட்டினார்கள். அதாவது டிசம்பர் மாதம் தான் பாமாயில் வந்திருக்கிறது, அதேபோல பருப்பும் ஜனவரி மாதத்தில் தான் வந்திருக்கிறது. அதுவும் குறைவாக வந்திருக்கிறது என்பதை என்னிடத்தில் ஆதாரத்தோடு எடுத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அதேபோல பொதுமக்களும் மிகுந்த தொல்லைகளுக்கு நாங்கள் ஆளாகியிருக்கிறோம் என்கிற வேதனையும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த நிலை என்னுடைய கொளத்தூர் தொகுதியில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இன்றைக்கு இதுதான் நிலை.

எனவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் 89 சட்டமன்ற உறுப்பினர்களும் உடனடியாக அவர்கள் தொகுதியில் இருக்கும் ரேஷன் கடைகளுக்குச் சென்று ஆய்வுப் பணியை மேற்கொண்டு முறையான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் என்னிடம் வழங்கிட வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.

இந்த நிலை தொடரும் என்று சொன்னால், ஒரு வார காலத்திற்குள் இந்த அரசு இதனை சரிசெய்யவில்லை என்று சொன்னால் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு முன்னால் திராவிட முன்னேற்றக் கழகம் அறப்போராட்டத்தை நடத்தும் என்பதை இந்த அரசுக்கு ஒரு எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in