

நெடுஞ்சாலை திட்ட ஊழல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை தேவை என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பது குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் தமிழகத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் தடைபட்டுள்ள நிலையில், ஊழல் காரணமாக மேலும் பல திட்டங்கள் முடங்கும் ஆபத்து உள்ளது.
தமிழகத்தில் ரூ. 4641 கோடி மதிப்புள்ள 972 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. தமிழக அரசின் ஒத்துழைப்பின்மை, அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டத்தில் தலைவிரித்தாடும் ஊழலே இதற்குக் காரணம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளிப்படையாகவே குற்றஞ்சாற்றியிருக்கிறது.இந்த ஊழல்கள் குறித்து தமிழக அரசிடமும், காவல்துறையினரிடமும் புகார் அளித்தும் அதை அவர்கள் பதிவு செய்யவில்லை என்றும் அந்த அதிகாரி குறை கூறியுள்ளார்.
தமிழக அரசு மற்றும் ஆளுங்கட்சியினர் மீது தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைமைப் பொதுமேலாளர் கூறியுள்ள குற்றச்சாற்றுகள் மிகவும் கடுமையானவை.
ஸ்பெக்ட்ரம், நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை தனியாருக்கு குறைந்த கட்டணத்தில் தாரைவார்த்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது எப்படி குற்றமோ, அதேபோல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்குவதற்காக மக்களின் வரிப்பணத்தை வாரி வழங்குவதும் குற்றம் தான்.
இதில் மாநில அரசே சம்பந்தப்பட்டிருப்பதாலும், இப்படி ஒரு குற்றச்சாற்றை மத்திய அரசு அதிகாரியே கூறி இருப்பதாலும் இது குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ.) விசாரணைக்கு மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார்.