

சென்னையில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் மாநகர போக்குவரத்துக் கழகம் 100 சிறிய பஸ்கள் இயக்க திட்டமிட்டது. அதன்படி, கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி சென்னையில் 20 வழித்தடங்களில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
தற்போது சென்னையில் பல்லாவரம், ராமாபுரம், போரூர், குரோம்பேட்டை, அம்பத்தூர், கோயம்பேடு உள்ளிட்ட முக்கியமான பகுதிகளை இணைக்கும் வகையில் சிறிய பஸ்கள் செல்கின்றன. இவை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு சிறிய பஸ் மூலம் சராசரியாக ரூ.8 ஆயிரம் வசூலாகிறது. சில வழித்தடங்களில் பெரிய பஸ்களை விட அதிகமாக வசூலாகிறது.
அடுத்த கட்டமாக விரைவில் 50 சிறிய பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது இதற்கான வழித்தடங்களை தேர்வு செய்யும் பணி முடியும் நிலையில் உள்ளது.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து துறையின் உயர் அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் இயக்கப்படும் சிறிய பஸ்கள் பெரும்பாலான இடங்களில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அடுத்த கட்டமாக 50 சிறிய பஸ்களுக்கு பாடி கட்டும் பணி முடியும் நிலையில் உள்ளது. விரைவில் புதியதாக 50 சிறிய பஸ்கள் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு கிடைக்கவுள்ளது. இந்த சிறிய பஸ்களுக்கான வழித்தடங்களும் பெரும்பாலும் தேர்வு செய்யப்பட்டுவிட்டன.
இந்த முறை வடசென்னையின் உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் வழித்தடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் சிறிய பஸ்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். எந்தெந்த இடம் என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.