

சரியான தருணத்தில் உதவிய முதல்வருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தில் காயமடைந்த நஜ்ஜூ என்ற மாணவி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் நந்தினி (24). இவர் கடந்த 4-ம் தேதி இரவு நஜ்ஜூ என்ற மாணவியுடன் சேர்ந்து ஏடிஎம்மில் பணம் எடுத்துக்கொண்டு, இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது நடந்த வழிப்பறி சம்பவத்தின்போது ஏற்பட்ட விபத்தில் நந்தினி பலியானார். சாலையோரம் படுத்திருந்த சேகர் என்ற முதியவர் இறந்தார். நந்தினியுடன் சென்ற நஜ்ஜூ படுகாயமடைந்தார்.
நந்தினியின் குடும்பத்துக்கும், தனது மருத்துவ செலவினங்களுக்கும் தமிழக முதல்வர் உதவ வேண்டும் என நஜ்ஜூ கோரிக்கை விடுத்திருந்த செய்தி 'தி இந்து' நாளிதழில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகி இருந்தது.
இந்நிலையில், 'தி இந்து' செய்தி எதிரொலியாக பட்டினப்பாக்கம் வழிப்பறி சம்பவத்தின்போது பலியான நந்தினியின் குடும்பத்துக்கும், உயிரிழந்த சேகர் என்ற முதியவர் குடும்பத்துக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் செல்வி நஜ்ஜீக்கு ஒரு லட்சம் ரூபாயும் வழங்க முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டார்.
மேலும், பலத்த காயமடைந்துள்ள நஜ்ஜூ பூரண குணம் அடையும் வகையில் உயரிய சிகிச்சை தொடர்ந்து அளித்திட முதல்வர் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நஜ்ஜூவின் தாயார் லதாவை சந்தித்துப் பேசினோம்.
''இன்று காலை 10 மணி அளவில் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நஜ்ஜூவின் மருத்துவ சிகிச்சை தொடர்பாக முதல்வர் உத்தரவிட்டதை வருவாய்த்துறை அதிகாரிகள் பேசினர். அதற்குப் பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு என் மகள் நஜ்ஜூவை அழைத்துச் சென்றனர். இப்போது தனிப்பிரிவில் என் மகள் நஜ்ஜூவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வரின் இந்த நடவடிக்கை எங்களுக்கு மனநிறைவை அளிக்கிறது. முதல்வருக்கு நன்றி'' என்றார்.
நஜ்ஜூ பேசுகையில், ''முதல்வரின் உதவியை எதிர்பார்க்கவில்லை. சரியான தருணத்தில் உதவிய முதல்வருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்'' என்றார்.