

சாகித்ய அகாடமி ஆண்டுதோறும் இளம் எழுத்தாளர்களுக்கான 'யுவ புரஸ்கார்' விருதையும் சிறுவர் இலக்கியத்துக்கான 'பால சாகித்ய' விருதையும் 21 இந்திய பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு வழங்கிவருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான யுவ புரஸ்கார் விருது கவிஞர் மனுஷி பாரதிக்கும் (ஜெய பாரதி), பால சாகித்ய அகாடமி விருது வேலு சரவணனுக்கும் தமிழில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கவிஞர் மனுஷி பாரதி பெண்களுக்கான இருப்பு, அவர்களின் உணர்வுகள், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், ஆகியவற்றை கவிதைகள், சிறுகதைகளில் பதிவு செய்து வருகிறார். குட்டி இளவரசியின் ஒளிச் சொற்கள், முத்தங்களின் கடவுள், ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் ஆகிய மூன்று கவிதைத் தொகுப்புகளை எழுதி வெளியிட்டுள்ளார். இவரது ஆதிக் காதலின் நினைவுக் குறிப்புகள் கவிதைத் தொகுப்புக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலு சரவணன் குழந்தைகள் உலகில் இடைவிடாது இயங்கிக் கொண்டிருக்கும் கலைஞர். புதுவை பல்கலைக்கழகத்தின் சங்கரதாஸ் சுவாமிகள் நாடகக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கிறார்.
குழந்தைகளுக்கான பாடங்களை நாடகங்கள், கதைகள் வடிவில் கற்றுக் கொடுப்பதற்கான பயிற்சிகளை பள்ளி ஆசிரியர்களுக்கு அளித்து வருகிறார். குழந்தைகளுக்கான சிறந்த நாடக கலைஞராக இவரை சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல அமைப்புகள் அங்கீகரித்திருக்கின்றன. குழந்தைகள் இலக்கியத்துக்காக வேலு சரவணன் அளித்திருக்கும் ஒட்டுமொத்த பங்களிப்புக்காக பால சாகித்ய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.