

சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை நீலாங்கரை அருகேயுள்ள வெட்டுவாங்கேணியைச் சேர்ந்தவர் சபினா பேகம். கணவரை இழந்த அவர், 3 பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். அவரது 15 வயது மகன் தமீம் அன்சாரியை ஒரு வழக்கின் விசாரணைக்காக கடந்த ஜனவரி 7-ம் தேதி நீலாங்கரை போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் துப்பாக்கிக் குண்டு தாக்கியதில் தமீம் அன்சாரி படுகாயமடைந்தார்.
பின்னர் பெரும்பாக்கம் தனியார் மருத்துவமனையில் தமீம் அன்சாரி அனுமதிக்கப்பட்டு, அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் சபினா பேகம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். காவல் நிலையத்தில் ஆய்வாளர் புஷ்பராஜ் என்பவர் எனது மகனை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் தனியார் மருத்துவமனையிலேயே தொடர்ந்து எனது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் சபினா பேகம் கூறியிருந்தார். தமீம் அன்சாரியின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோரைக் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கேசவன் ஆஜரானார். அப்போது, நீலாங்கரை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் எம்.எஸ்.பாஸ்கர் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கை தாக்கல் செய்தார்.
சம்பவ நாளில் நீலாங்கரை காவல் நிலையத்தில் இருந்த தமீம் அன்சாரி, உணவு உண்ட பின் தரையில் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் தனது கைத்துப்பாக்கியை துடைத்து சுத்தம் செய்து, உறையினுள் வைக்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக துப்பாக்கி தவறி கீழே விழுந்துவிட்டது. அப்போது துப்பாக்கியில் இருந்த குண்டு வெடித்து அருகே படுத்திருந்த தமீம் அன்சாரியின் கழுத்தில் காயம் ஏற்பட்டது.
உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமீம் அன்சாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் குணமடைந்து விட்டார்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. துப்பாக்கியை அலட்சியமாக கையாண்ட இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் உள்ள தமீம் அன்சாரி முழுமையாக குணமடைந்து விட்டதால், அவரை அங்கிருந்து விடுவிக்கலாம் என்று அந்த அறிக்கையில் பாஸ்கர் கூறியுள்ளார்.
இதனையடுத்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.