Last Updated : 30 Mar, 2017 05:55 PM

 

Published : 30 Mar 2017 05:55 PM
Last Updated : 30 Mar 2017 05:55 PM

வாயில் கறுப்புத்துணி கட்டி டெல்லியில் தமிழக விவசாயிகள் 17-வது நாளாக போராட்டம்

வாயில் கறுப்புத்துணியை கட்டிக்கொண்டு தமிழக விவசாயிகள் டெல்லியில் இன்று போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் இருந்து பெருகும் ஆதரவால் 17 ஆம் நாளாக தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்கிறது.

தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் சார்பில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இச்சங்கத்தின் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் போராட்ட துவக்கத்தில் இருந்தனர். டெல்லியில் கூடிவிட்ட சுட்டெரிக்கும் வெயிலால் பல விவசாயிகளின் உடல்நிலை குன்றத்துவங்கி உள்ளது. இதனால், போராட்டத்துற்கு வந்த விவசாயிகள் எண்ணிக்கை பாதியாகக் குறைந்தாலும், தமிழகத்தின் மேலும் பல விவசாயச் சங்கத்தினர் டெல்லி வந்து குவிந்தபடி உள்ளனர்.

இவர்களுடன் தற்போது பி.ஆர்.காவேரி பாண்டியன் தலைமையிலனான தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, இளங்கீரன் தலைமையிலான காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு, ஒ.ஏ.நாராயண சாமி தலைமையிலான தமிழ் விவசாயிகள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்களும் டெல்லியில் கூடியுள்ளனர்.

இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இன்று, நாம் தமிழகர் கட்சியின் தலைவரும் நடிகருமான சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு, மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவர் ஹைதர் அலி ஆகியோரும் வந்திருந்தனர். இவர்களுடன் தமிழகத்தின் பல்வேறு மாணவர் அமைப்புகளும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமுடன் வந்துள்ளனர்.

ஹரியாணா முன்னாள் சட்டமன்ற எம்.எல்.ஏ-யும் சமூக சேவகருமான சுவாமி அக்னிவேஷும் போராட்ட விவசாயிகளைச் சந்தித்தார்.

கடந்த மார்ச் 13 ஆம் தேதி முதல் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று போராட்டத்தில், விவசாயிகள் வங்கிக்கடன் ரத்து, வறட்சிக்கான கூடுதல் நிதி, தென் இந்திய நதிகள் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் 17 ஆம் நாளான இன்று விவசாயிகள் தங்கள் வாயில் கறுப்புத்துணியை கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனநாயக நாட்டில் விவசாயிகள் தங்கள் போராட்டக்குரல் கொடுக்க முடியாமல் வாய் அடைக்கப்படுவதாக இதை செய்திருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x