

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரட்டை குண்டு வைத்தவர்கள் மேற்கு வங்கத்தில் இந்திய எல்லையில் பதுங்கியிருப்பதை தேசியபுலனாய்வு முகமை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 1-ம் தேதி 9-வது நடைமேடையில் வந்து நின்ற பெங்களூரு - குவாஹட்டி விரைவு ரயிலில், இரட்டை குண்டு வெடித்தது. இதில் ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண் பொறியாளர் பலியானார். 14 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். குண்டு வெடிப்பு நிகழ்ந்த, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, பெங்களூரு ரயில் நிலையம் வரை உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்த போதும், அவர்களால் துப்பு துலக்க முடியவில்லை. எந்த தீவிரவாத அமைப்பும் இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்கவும் இல்லை.
குண்டு வெடிப்பிற்கு பயன்படுத்தப்பட்ட வெடிமருந்தின் மாதிரிகள் வடமாநிலங்களில் பிரபலமாக பயன்படுத்தப்பட்ட மருந்தின் தன்மையை ஒத்திருந்தது. தேசிய அளவில் இந்த குண்டு வெடிப்பிற்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு(என்ஐஏ) மாற்றப்பட்டது.
செல்போன் மூலம் கிடைத்த துப்பு
குண்டு வெடிப்பு நடந்த குவாஹட்டி விரைவு ரயில் பெங்களூரில் இருந்து சென்னை வந்த வழித்தடங்களில் உள்ள செல்போன் கோபுரங்களில் பதி வான அனைத்து செல்போன் பேச்சுக்களையும் என்ஐஏ அதிகாரி கள் ஆய்வு செய்தனர். இதில் குவாஹட்டி ரயிலில் பயணம் செய்த ஒரு நபருக்கு இரண்டு எண்களில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துள்ளன.
இதேப்போல ஏராளமான அழைப்புகள் அதே ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு வந்திருந்தாலும், அவை அனைத்தும் தொடர்ந்து இப்போது வரை பயன்பாட்டில் உள்ளன. ஆனால் அந்த மர்ம நபருக்கு வந்த அழைப்புகள் குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்கு பிறகு சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு விட்டன.
ரயிலில் இரட்டை குண்டுகளை வைத்துவிட்டு, அதே ரயிலில் பயணம் செய்த நபர் மற்றும் அவருக்கு தொடர்ந்து செல்போனில் பேசிய இரண்டு நபர்கள், இந்த 3 பேரின் செல்போன்களும் குண்டு வெடிப்பு நடந்த சில மணி நேரங்களில் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. அதன் பின்னர் அந்த சிம் கார்டுகளையும், செல்போன்களையும் அவர்கள் பயன்படுத்தவில்லை.
அவர்கள் பயன்படுத்திய 3 செல்போன்களின் ஐஎம்இஐ நம்பரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், கடந்த வாரம் அந்த செல்போன்களை 3 பேரும் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதை கண்டுபிடித்தனர். சிம் கார்டுகளை மாற்றிய அவர்கள், செல்போன்களை மாற்றாமல் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இந்திய எல்லையில் பதுங்கல்
3 பேரின் செல்போன் சிக்னல்களை வைத்து அவர்கள் இருக்கும் இடத்தை பார்த்தபோது, மேற்கு வங்க மாநிலத்தின் இந்திய எல்லை பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அவர்களை பிடிக்கும் முயற்சியில் மேற்கு வங்க போலீஸாரும், இந்திய உளவு அமைப்பினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய தீவிரவாத அமைப்பு
இந்தியாவில் தீவிரவாத செயல்களை நடத்திவரும் இந்தியன் முஜாகிதீன் என்ற அமைப்பு, தென் இந்தியாவில் புதிதாக உருவாகியிருக்கும் ஜமாத்உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியிருப்பது என்ஐஏ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜமாத்உல் முஜாகிதீன் அமைப்பை உருவாக்கியவர்கள் யார்? அதை தலைமை தாங்கி நடத்துபவர்கள் யார்? என்பது குறித்து கண்டுபிடிக்க தென் இந்தியா மாநில போலீஸாரின் உதவியை என்ஐஏ அதிகாரிகள் கேட்டுள்ளனர்.