

வேந்தர் மூவிஸ் நிர்வாகி மதன் கடந்த மே மாதம் தலைமறைவானார். இவரை கண்டுபிடித்து ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மதனின் தாயார் தங்கம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதே போல் எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் படிப் புக்கு இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் ரூ. 72 கோடி வரை மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் தரப்பிலும் தனியாக உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்கை விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக நியமித்து நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.பாரதிதாசன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘வழக்கின் எதிர்மனுதாரராக இல்லாத அதிகாரி ஒருவர் தாக்கல் செய்யும் அறிக்கையை நாங்கள் ஏற்க முடியாது. எத்தனையோ ஆட்கொணர்வு மனுக்கள் நிலுவையில் உள்ள போது, இந்த வழக்குக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கி யத்துவம் தரப்பட்டது என எங்களுக்கு புரியவில்லை. எல்லா வழக்குகளையும் ஒரே மாதிரியாகத்தான் கருத வேண்டும். இந்த வழக்கில் ஆய்வாளர்தான் எதிர்மனுதார ராக உள்ளார். எனவே மத்திய குற்றப்பிரிவு துணை ஆணை யரை எதிர்மனுதாரராக சேர்த்தால் மட்டுமே அவரது அறிக் கையை சட்டப்படி நாங்கள் ஏற்க முடியும். மாயமாகியுள்ள மதன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகளை ஒரு வாரத்துக்குள் கைது செய்து ஆஜர் படுத்த வேண்டும்’’ என போலீஸ் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் செப்டம்பர் 21-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.