Published : 18 Feb 2014 08:14 AM
Last Updated : 18 Feb 2014 08:14 AM

திருச்சி மாநாடு வெற்றி தேடித் தருமா?

திருப்புமுனையாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றாலும் எதிர்க்கட்சியினரைகூட திரும்பிப் பார்க்க வைத்துள்ளது திருச்சியில் இரு தினங்கள் நடைபெற்ற திமுகவின் 10-வது மாநில மாநாடு.

விரைவில் வரவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிருத்தி, தனது வலிமையையும், தொண்டர் பலத்தையும் பறைசாற்றுவதற்காக 10-வது மாநில மாநாடு திருச்சியில் நடத்தப்படுமென திமுக தலைமை அறிவித்தது.

பிரமாண்ட ஏற்பாடுகளுடன் இருநாள்களும் நடைபெற்ற இந்த மாநாடு தொண்டர்களால் களைகட்டியது என்பதை மறுக்க முடியாது. மத்திய, மாநில உளவுப் பிரிவுகளின் கணக்கெடுப்பின்படி முதல்நாளில் 1.25 லட்சம் பேரும், இரண்டாவது நாளில் ஏறத்தாழ 2 லட்சம் பேரும் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த மாநாட்டுக்கு கூடிய தொண்டர்கள் கூட்டத்தைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என அனைவருமே தமது மகிழ்ச்சியை தங்களது பேச்சில் குறிப்பிட்டனர்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வில் பேசிய மு.க. ஸ்டாலின், அதிமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்தார். மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வந்து விடாதா என மக்கள் எண்ணுவதாக தனது பேச்சில் அவர் குறிப்பிட்டபோது, தொண்டர்கள் கூட்டம், அதை பெரும் ஆரவாரத்துடன் ஆமோதித்தது.

மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய திமுக தலைவர் கருணாநிதி, தனது உரையைத் தொடங்கி 20 நிமிடங்கள் வரையில் மாநாட்டு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்த கே.என். நேருவைப் பாராட்டியும், அவரது தம்பி ராமஜெயம் கொல்லப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டும் பேசினார்.

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்துப் பேசிய கருணாநிதி, சேது சமுத்திரத் திட்டத்தையும், மதசார்பற்றக் கொள்கையையும் ஆதரிக்கும் எந்தக் கட்சியும் இந்த கூட்டணிக்கு வரலாம் என அழைப்பும் விடுத்தார்.

தற்போது திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள கட்சிகளைக் கொண்டு மக்களவைத் தேர்தலை சந்திப்பது சவாலாகவே இருக்கும் என்ற அவரது மனஓட்டத்தை வெளிப்படுத்துவதாகவே இதை கருதுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடினாலும், அது மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்யும் அளவுக்கு வாக்குகளாக மாறுமா என்பதும் பழுத்த அரசியல் அனுபவம் கொண்ட, 60 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தேர்தல்களைச் சந்தித்து வரும் திமுக தலைவருக்கு நன்றாகவே தெரியும்.

தமிழகத்தில் தற்போது வரையில் எந்த கூட்டணியிலும் இடம்பெறாமல் இருப்பது காங்கிரஸ் மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் மட்டும்தான்.

இந்த இரு கட்சிகளைக் குறி வைத்துதான் திமுக கூட்டணி பெரிய கூட்டணியாக உருவாகும் என கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

திமுகவின் முந்தைய மாநாடுகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, கருணாநிதியின் பேச்சை கேட்டுவிட்டு திரும்பிய தொண்டர்களிடம் காணப்பட்ட உற்சாகம், எழுச்சி ஆகியவை கருணாநிதியின் இந்த மாநாட்டுப் பேச்சு ஏற்படுத்தாததைக் கண்கூடாகக் காணமுடிந்தது.

ஒட்டுமொத்தத்தில் 10-வது திமுக மாநில மாநாடு அரசியல் களத்தில் நாங்கள் சோர்ந்து விடவில்லை என்பதை வெளிக்காட்டும் வகை யிலும், கட்சியின் அடுத்த தலைவராக முன்னிறுத்தப்படும் மு.க. ஸ்டாலினுக்கு மகுடம் சூட்டுவதை உறுதிப்படுத்தும் வகையிலும் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x