

‘தேர்தல் மன்னன்’ பத்மராஜன் சனிக்கிழமை தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியில் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். இதுவரை 158 முறை பல்வேறு தேர்தல்களில் மனுதாக்கல் செய்துள்ளதாகவும், மோடியை எதிர்த்தும் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பத்மராஜன். கடந்த 26 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் இடைத் தேர்தல்களில் போட்டியிட்டு வருகிறார். தொடக்கத்தில் பஞ்சர் கடை நடத்திய இவர், பின்னர் சிறிய டயர் தொழிற்சாலைக்கு உரிமையாளரானார். சாதனை முயற்சிக்காக தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிட்டு வரும் பத்மராஜன், நேற்று தருமபுரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்தார். மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான விவேகானந்தனிடம் அவர் வேட்புமனுவை வழங்கினார். பின்னர் பத்மராஜன் கூறியது: கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறேன். வேட்புமனு அளிப்பதுடன் சரி. பிரச்சாரம் செய்தது கிடையாது. கஜினி முகமதுவை விட அதிக தோல்விகளைத் தழுவியது நான்தான் என்றார்.