

தமிழகம் முழுவதும் நீதிமன்ற அறைகளில் சிசிடிவி கண் காணிப்பு கேமரா பொருத்துவது தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தா லோசித்து ஒருங்கிணைந்த திட்ட அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு பதிவுத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். காசிராமலிங்கம், ‘‘ தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தி நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை மாவட்ட நீதிமன்ற வளாகங்களில் மட்டும் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து அரசுக்கு உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை அனுப்பியது.
அதன்படி உரிய நிதியை தமிழக அரசும் ஒதுக்கியுள்ளதால் பணி விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பரிந்துரை எழுந்துள்ளது.
இதன்படி நீதிமன்ற அறை களின் உள்ளேயும் வெளிப்புற வராண்டா மற்றும் நீதிமன்ற வளாகம் முழுவதிலும் கேமரா பொருத்துவதற்கு தமிழக அரசு போதுமான நிதி ஒதுக்க வேண்டும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளுடன் உயர் நீதிமன்ற பதிவுத்துறை கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த திட்ட அறிக் கையை தலைமை வழக்கறிஞர் மூலமாக தமிழக அரசுக்கு 4 வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு அரசு அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.