Published : 27 Jun 2017 08:51 AM
Last Updated : 27 Jun 2017 08:51 AM

சென்னை குடிநீர் வாரியத்தில் குடிநீர் கோரிய பதிவுகள் ரத்து: முறையாக அறிவிக்காததால் பொதுமக்கள் அவதி

சென்னை குடிநீர் வாரியத்தில் கட்டணக் குடிநீர் கேட்டு செய்யப்பட்ட பதிவுகள் அனைத்தையும் குடிநீர் வாரியம் ரத்து செய்துள்ளது. இது குறித்து முறையாக அறிவிக்காததால், பதிவு செய்த பொதுமக்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

சென்னை குடிநீர் வாரியத்தில் தொலைபேசி வழியாக கட்டண குடிநீர் கேட்டு பதிவு செய்யும் சேவை நடைமுறையில் உள்ளது. இந்த தொலைபேசி மூலம் தினமும் ஆயிரக்கணக்கானோர் குடிநீர் கேட்டு பதிவு செய்து வருகின்றனர். முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் குடிநீர் விநியோகிக்கப்படும் என்று குடிநீர் வாரியம் அறிவித்திருந்தது.

ஆனால், நடைமுறையில் முன்னாள் கவுன்சிலர்கள், கட்சி பிரதி நிதிகள் மற்றும் சமூகத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் என பலர் பரிந்துரை செய்பவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. செல்வாக்கு இல்லாத பொது மக்கள் 15 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

அதை அறிந்த சென்னை குடிநீர் வாரிய தலைமை அலுவலக அதிகாரிகள், இனி எந்த பரிந்துரையையும் ஏற்கக் கூடாது. பரிந்துரையின் பேரில் இனி யாருக்கும் குடிநீர் விநியோகிக்க கூடாது. முதலில் பதிவு செய்வோருக்குதான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

காத்திருக்கும் பொதுமக்களை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது, பதிவு செய்தவர்கள், குடிநீர் வாரியத்தை அணுகினால், “கணினி சர்வரில் பழுது ஏற்பட் டுள்ளது. அதனால் மீண்டும் பதிவு செய்யுங்கள்” என்று தெரிவிக்குமாறு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட தாக கூறப்படுகிறது. இது தொடர்பாக முறையாக அறிவிக்கப்படாததால், குடிநீர் கேட்டு பதிவு செய்து காத்திருக்கும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கெனவே பதிவு செய்தவர்கள், எப்போது குடிநீர் கிடைக்கும் என்று சென்னை குடிநீர் வாரியத்தை தொடர்புகொண்டால் மட்டுமே, மீண்டும் பதிவு செய்யுமாறு கூறப் படுகிறது.

நேற்று பலர் மீண்டும் பதிவு செய்த நிலையில், அவர்களுக்கு உடனுக்குடன் குடிநீர் விநியோகிக்கப் பட்டது. விவரம் தெரியாமல் காத் திருக்கும் பொதுமக்கள், குடிநீர் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x