

கோவையில் ஒரு புதிய மண்டலக் கலை பண்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட சுற்றுலா, கலை, பண்பாடு மற்றும் அருங்காட்சியகங்கள் துறை சார்ந்த புதிய அறிவிப்புகள்
1. புதிய மற்றும் திருத்திய சுற்றுலா பெருந்திட்டம் தமிழ்நாடு முழுவதற்கும் அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்தும் வகையில் ஒரு சுற்றுலா பெருந்திட்டம் தயாரிக்கப்படும்.
*தமிழ்நாட்டில் உள்ள மரபுச் சின்னங்கள் மற்றும் பழமை வாய்ந்த சுற்றுலாத் தலங்களை பாதுகாத்தல், பழமை மாறாமல் புதுப்பித்தல்
* ஆவணப்படுத்துதல்;
* சுற்றுலாத் தொழில் சார்ந்தோர் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பயிற்சி;
* திறன் வளர்ப்பு மற்றும் உள்ளூர் சமூக வாழ்வாதார நலன்களை மேம்படுத்துதல்;
* உட்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து வசதிகள் உருவாக்கித் தருதல் ஆகியன இத்திட்டத்தில் இடம் பெறும்.
இந்த பெருந்திட்டத்தின்படி:-
i) கடற்கரை சுற்றுலாச் சுற்று வசதிகள் ரூ.95 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ii) காஞ்சிபுரம் நகரம் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய இடங்களில் மேம்பாட்டுப் பணிகள் ரூ.22 கோடியே 35 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.
iii) ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவித் திட்டத்தின் கீழ் முக்கிய சுற்றுலாத் தலங்களில் மேம்பாட்டுப் பணிகள் ரூ.403 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
2. கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் 6 மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்கள் காஞ்சிபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
சேலம் மண்டல உதவி இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் 8 மாவட்டங்கள் உள்ளன. எனவே, கலைப் பணிகளை சிறப்புற மேற்கொள்ளும் வகையில், கோயம்புத்தூரில் ஒரு புதிய மண்டலக் கலை பண்பாட்டு மையம் ஏற்படுத்தப்படும்.
சேலம் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களும், கோயம்புத்தூர் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களும் இருக்கும்.
3. மிகப் பழமையான சென்னை அரசு கவின் கலைக் கல்லூரியில் பழுதடைந்த வகுப்பறைகள் ரூ.1 கோடியே 40 லட்சம் செலவில் புதுப்பிக்கப்படும்.
4. சென்னை அரசு அருங்காட்சியகம் மற்றும் 20 மாவட்ட அருங்காட்சியகங்கள் ஆகியவற்றில் ரூ.ஒரு கோடியே 20 லட்சம் செலவில் தானியங்கி தீத்தடுப்பு ஒலிப்பான்கள் மற்றும் பாதுகாப்புச் சாதனங்கள் பொருத்தப்படும்.
5. சென்னை அரசு அருங்காட்சியகம் 3 பழமையான கட்டிடங்கள் மற்றும் 3 புதிய கட்டிடங்களில் சுமார் ஒரு லட்சம் சதுர அடியில் 54 காட்சிக் கூடங்களை கொண்டுள்ளது. இக்காட்சிக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டு சீரமைக்கப்படும்.
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் காட்சியமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பார்வையாளர்களுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். நடைபாதைகள் மற்றும் உட்புறச் சாலைகள் ஆகியவை மேம்படுத்தப்படும். இப்பணிகள் ரூ.10 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
6. தமிழகத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்வது தொல்லியல் துறையின் முதன்மைப் பணிகளில் ஒன்றாகும். இதுவரை 39 இடங்களில் அகழாய்வினை மேற்கொண்டு, அவற்றில் 36 இடங்களில் மேற்கொண்ட அகழாய்வுகளின் அறிக்கைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஒரு விரிவான தொல்லியல் அகழாய்வு ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளத்தில் மேற்கொள்ளப்படும். அழகன்குளம் ராமநாதபுரத்திலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவில் வைகை ஆற்றின் வடகரையில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. இக்கிராமம் கி.மு 2-ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.2-ஆம் நூற்றாண்டு வரையிலான காலக் கட்டத்தில் ரோமானியர்களுக்கு முக்கிய துறைமுகமாக தமிழகத்தில் திகழ்ந்துள்ளது. இப்பகுதியில் வாணிபம் நடைபெற்றதற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
1984-ஆம் ஆண்டு முதல் இதுவரை 24 அகழாய்வுக் குழிகளில் கிடைக்கப்பட்ட தொல்பொருட்களின் மூலம் பண்டைய மக்களின் சமூக, பண்பாட்டு செயல்பாடுகள் தெரிய வந்துள்ளது. எனவே, அழகன்குளத்தில் விரிவான தொல்லியல் அகழாய்வு பணிகள் ரூ.55 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.