ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைகளை அமல் படுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைகளை அமல் படுத்தக்கூடாது: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published on

ரகுராம் ராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல் படுத்தக்கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ரகுராம் ராஜன் கமிட்டி அண்மையில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் கோவா, கேரளா, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் முன்னேறிய மாநிலங்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மாநிலங்களின் பின்தங்கிய நிலைமை, வளர்ச்சி ஆகியவற்றை அறிந்து எந்த அடிப்படையில் அவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது குறித்து கமிட்டி ஆராய்ந்து, அதன்படி வளர்ந்த மாநிலங்கள், வளரும் மாநிலங்கள், பின்தங்கிய மாநிலங்கள் என்று 3 பிரிவுகளாக மாநிலங்களைப் பிரித்து ஒரு புதிய வழிகாட்டு முறையை வகுத்திருந்தது ரகுராம் ராஜன் கமிட்டி.

நிதி ஒதுக்கீடு பற்றி கமிட்டி அளித்த பரிந்துரையில், ஒவ்வொரு மாநிலத்திற்கும் அடிப்படையாக நிலையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாநிலங்களின் தேவைகள், மேம்பாட்டுச் செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் அவைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததுது.

இந்நிலையில் ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தினால் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தமிழகத்துக்கு கிடைக்கும் மத்திய அரசின் நிதி அளவு குறைய வாய்ப்பு உள்ளதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

எனவே ரகுராம் ராஜன் கமிட்டி பரிந்துரைகளை தமிழகத்தில் எந்த வடிவத்திலும் செயல்படுத்தக்கூடாது என பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். மேலும் மாநிலங்களுக்கு நிதி பங்கீடு செய்யும் நிதிக்குழு சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in