

கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரியில் நேற்று கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 68 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். கத்தியுடன் பிடிபட்ட 5 பேர் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்களில் இரு பிரிவினர் இடையே நேற்று காலை கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது, ஒரு பிரிவு மாணவர்களை தாக்கிய மற்றொரு பிரிவைச் சேர்ந்த 68 பேரை பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் அடங்கிய ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பிடித்தனர். அப்போது, கத்திகளுடன் பிடிபட்ட 5 மாணவர்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதுகுறித்து பச்சையப்பன் கல்லூரி முதல்வர் எஸ்.காளிராஜ் கூறியதாவது:
மாணவர்கள் இடையே பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, கல்லூரியில் பல்வேறு துறைகளின் பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் ஆகியோர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு இயங்கி வருகிறது.
காலை 10.30 மணி அளவில் மாணவர்கள் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. எதிர் கோஷ்டியை சேர்ந்த மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதலில் ஈடுபட்ட 68 மாணவர்களை ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் பிடித்தனர். அவர்களில் 5 மாணவர்கள் கத்திகளை வைத்திருந்தனர். அவர்கள் 5 பேரையும் போலீஸிடம் ஒப்படைத்துள்ளோம். தாக்குதலில் ஈடுபட்ட 68 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கல்லூரிக்கு விடுமுறை
சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை (இன்று) ஒருநாள் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.