Published : 29 Nov 2013 00:00 am

Updated : 06 Jun 2017 15:24 pm

 

Published : 29 Nov 2013 12:00 AM
Last Updated : 06 Jun 2017 03:24 PM

கோவை: பகலில் பள்ளி, இரவில் வீடு- பிஞ்சுகளின் வாழ்க்கையில் விளையாடும் அதிகாரிகள்

கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரில் உள்ள, பால்வாடி பள்ளியின் நிலை மிக மோசமாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தகரக் கொட்டகையில் நடத்தப்பட்ட இந்த பால்வாடி பள்ளி, பத்திரிகைகளில் செய்திகள் வந்ததால் இடமாற்றம் செய்யப்பட்டது. ஆனால், கண்டறிய முடியாதபடி எங்கே போனது எனத் தேடினோம்.

அங்குள்ள ஓர் ஓலைக் குடிசையில், குழந்தைகளை அமரவைத்து பாடம் சொல்லிக் கொடுத்தவர்களிடம் விசாரித்த போது, இப்பகுதியில்தான் இந்த பால்வாடி பள்ளி செயல்படுகிறது. அருகே ஒருவர் இறந்துவிட்டதால், உறவினர்கள் அனைவரும் பால்வாடி அறையைப் பயன்படுத்துகிறார்கள். எனவே குழந்தைகளின் வீடுகளுக்குச் சென்று உணவு வழங்கி, பாடம் நடத்தி வருகிறோம் என, பால்வாடி ஊழியர்கள் தெரிவித்தனர் .


அரசு சார்பில் நடத்தப்படும் பால்வாடி கட்டடத்தில் எப்படி தனிநபர்கள் பயன்படுத்த முடியுமென விசாரித்தோம். அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சித்தாபுதூர் சாலையில் ஒருபுறம் அமைந்துள்ள பகுதிதான் இந்த தனலட்சுமி நகர். தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் இப்பகுதியில், சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. தங்களது குழந்தைகளை, பழையூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் உள்ள பால்வாடியில் படிக்க வைத்து வந்தனர். 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல முடியாது என்பதாலும், தனலட்சுமி நகரிலேயே, 40 குழந்தைகள் இருப்பதாலும் தனியே ஒரு பால்வாடி அமைத்துக் கொடுக்க கூறியுள்ளனர். அதன்படி, தனலட்சுமி நகருக்கு எதிரிலேயே சிறு கட்டடம் அமைத்து பள்ளி செயல்பட்டது.

தகரக் கொட்டகை

ஆனால், செம்மொழி மாநாடு சமயத்தில், திட்ட சாலை அமைப்பதாகச் சொல்லி அதை அப்புறப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகள் கடந்தும், திட்ட சாலை அமைக்கப்படாதது தனிக்கதை. இப்பள்ளி அங்கு, இங்கு என இடம் மாறி, சிறிது தொலைவில், தகரக் கொட்டகையில் சில நாட்கள் இயங்கின. இது குறித்த செய்திகள் வெளியானதும் அதுவும் காலி செய்யப்பட்டது.

தற்போது, தனலட்சுமி நகரில் உள்ள நாகராஜ் என்பவரது வீடே, பள்ளியாக செயல்படுகிறது.

அவர் பகலில் வேலைக்கு சென்றுவிடுவதால், அந்த நேரத்தில் பள்ளியாகவும், இரவில் அவருக்கு வீடாகவும் உருமாறி வருகிறது. மிகவும் நெரிசலான சந்து, அதில் அடுக்கி வைக்கப்பட்டது போல வீடுகள், அதன் நடுவே ஒரு வீட்டில் இந்த பால்வாடி பள்ளி அமைந்துள்ளது.

தனியே ஒதுக்கப்பட்ட இடத்தையும் சாலை அமைக்கிறோம், மின்வாரியத்திற்கு சொந்தமான இடம் என விதவிதமாய் அறிவிப்பு தருகிறார்கள். போக்குவரத்து வசதி இல்லாத பகுதியில் இரண்டு கி.மீ., தூரம் நடந்துவந்து குழந்தைகளை எப்படி பள்ளியில் விடமுடியும்? ஆட்டோ வைத்து கூட்டிப் போவதாகக் கூறுகின்றனர். இது எத்தனை நாளைக்கு நடக்கும், அந்த காசு இருந்தால், தனியே வாடகைக் கட்டடமே பிடித்துவிடலாம் என்கின்றனர் குழந்தைகளின் தாய்மார்கள்.

இங்குள்ள குழந்தைகளுக்கு, 2 கி.மீ தொலைவில் உள்ள பழையூர் பள்ளியிலேயே உணவு தயாரிக்கப்படுகிறது. அதை ஊழியர்கள் இரண்டு பேரே, தினமும் சுமந்து வந்து குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.

முடிவு யார் கையில்?

இது குறித்து குழந்தைகள் நல வளர்ச்சித் திட்ட அதிகாரி வளர்மதியிடம் கேட்டபோது, ‘இந்த பிரச்சினை இன்று, நேற்றல்ல, நீண்ட காலமாக உள்ளது. ஆட்சியர், எம்.எல்.ஏ. என அனைவரிடமும் பேசி இருக்கிறோம். விரைவில், தனி கட்டடம் அமைக்கப்படுமென கூறியுள்ளனர். அப்பகுதி கவுன்சிலர் தான், இதில் முழுமையாக தலையிட வேண்டும். அப்போதுதான் இப்பிரச்சினை எளிதில் முடியும்’ என்றார்.

இடம் வேண்டும்

சம்மந்தப்பட்ட 53வது வார்டு கவுன்சிலர் சாவித்திரி கூறியதாவது:

ரூ.2 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட பால்வாடி மையத்தை, திட்ட சாலைக்காக அகற்றிவிட்டனர். மாற்று இடத்தில் குழந்தைகளை தங்க வைத்துபோது, ஆட்சியர் ஆய்வு நடத்தினார். 2 குழந்தைகள் மட்டுமே இருப்பதால், மேற்கொண்டு தனி கட்டடம் ஒதுக்க முடியாது என, அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். குழந்தைகள் எண்ணிக்கை 40ஐ தாண்டிவிட்டதால், சரியான இடம் தேடி வருகிறோம். குறைந்தபட்சம், வாடகையில் கிடைத்தால் கூட, பாதுகாப்பான இடத்திற்கு மாற்றிவிடுவோம் என்றார்.

எது எப்படியோ, பள்ளி வாழ்க்கையின் ஆரம்பத்தையும், தரமான குழந்தை வளர்ச்சியையும் உருவாக்கும் பால்வாடியின் சிறப்பு அரசு அதிகாரிகளுக்கு புரிந்தால் போதும் என்கிறனர் பொதுமக்கள்.

அப்பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (37) என்பவர் கூறியது:

குழந்தைகளை பராமரிக்க முடியாமல், பால்வாடி ஊழியர்கள் திணறி வருகிறார்கள். திடீர் திடீரென பள்ளி மாற்றப்படுவதால், நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். பழையூரில் உள்ள பால்வாடி பள்ளி டைல்ஸ் தரை போட்டு, சகல வசதிகளுடன் இருந்தும் அங்கு குழந்தைகள் இல்லை.

ஆனால், இங்கு 40 குழந்தைகள் இருந்தும் தனியே ஒரு கட்டடம் இல்லை. இங்கு நெரிசல், சுகாதாரக் குறைபாடு என பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவே, பால்வாடிக்கு அனுப்புகிறோம். அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், எங்கள் குழந்தைகளை, வீடுகளிலேயே தங்க வைத்து உணவு தருகிறார்கள் என்றார்.


பால்வாடிஅவலம்கல்விகுழந்தைகள் நலன்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x