

போராட்டம் என்ற பெயரில், விசுவ இந்து பரிஷத் வழங்கிய ஒரு நாள் விருந்தால், குழித்துறை மகாதேவர் கோயில் யானை `கோபாலன்’ புதன்கிழமை பசியாறியது.
மதம் பிடிப்பதற்கான அறிகுறிகள் இருந்ததால், `கோபாலன்’ யானை கோயில் அருகில் உள்ள தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. யானையை பராமரித்து வந்த இரண்டு பாகன்களுக்கு, 3 மாதமாக சம்பள பாக்கி இருந்தது. பாகன்களில் ஒருவர் வேலைக்கு வராமல் நின்றார். யானைக்கு கொடுக்க வேண்டிய உணவு வழங்கப்படாமல், அதனை பட்டினி போடுவதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து தொடர்ச்சியாக, ‘தி இந்து’ செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக, பல்வேறு தரப்பினரின் கவனத்தை ஈர்த்தது கோபாலன். அறநிலையத்துறை அதிகாரிகள், ‘பாகன்களுக்கு முறையாக சம்பளம் வழங்கப்படுவதாகவும், யானைக்கு சரியாக உணவு கொடுக்கப்படுவதாகவும்’ தெரிவித்தனர்.
`கோபாலன்’ யானை கட்டப்பட்டுள்ள பகுதியில், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் புதன்கிழமை திரண்டனர். விஸ்வ இந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுபாஷ்குமார் தலைமையில், கோபாலன் யானைக்கு தர்பூசணி, தென்னை ஓலை உள்ளிட்ட உணவுகள் வழங்கினர். பாகன்கள் மணிகண்டன், கிருஷ்ணன் ஆகியோருக்கும், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உணவு வழங்கினர்.
யானைக்கு அறநிலையத்துறை அதிகாரிகள் உணவு கொடுக்காததால், பாகன்கள் ஊர் முழுவதும் கடன் வாங்கி, உணவு கொடுத்து வந்ததாகவும் தெரிவித்தனர். அறநிலையத்துறை அதிகாரிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தக்கலை ஒன்றியத் தலைவர் முருகன், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவர்களது போராட்டத்தையெல்லாம் கண்டு கொள்ளாத `கோபாலன்’ யானை, கிடைத்த விருந்தை தும்பிக்கையை வளைத்து ஒரு கை பார்த்தது. தொடர்ந்து அதன் நிலை என்னவாகுமோ?