Published : 11 Aug 2016 05:07 PM
Last Updated : 11 Aug 2016 05:07 PM

என்.எல்.சி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தை திரும்பப் பெறுக: வீரமணி, வேல்முருகன் வலியுறுத்தல்

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், '' நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்றிருந்த பெயர் இரகசியமாக அவசரமாக NLC INDIA Ltd என்று மாற்றப்பட்டுள்ளது. இதன் அவசியம் என்ன? N என்பது நெய்வேலியைக் குறிக்கும் என்று நினைக்க வேண்டாம். NLC INDIA Ltd என்று இந்தியாவை திடீரெனப் புகுத்தி, தமிழகத்தின் அடையாளமான நெய்வேலி என்பதை நீக்கியுள்ளனர். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இதன் பின்னணியில் ஏதோ ஒரு திட்டம் இருப்பதாகத் தெரிகிறது. இந்த மாற்றத்தைக் கைவிட வேண்டும். இன்றேல் மக்கள் கிளர்ச்சி தவிர்க்க முடியாதது'' என்று வீரமணி கூறியுள்ளார்.

அதைப் போல, வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) என்ற பெயரை NLC India Limited (Formerly Neyveli Lignite Corporation Limited) என என்.எல்.சி. நிர்வாகம் மாற்றியுள்ளது. கொள்ளைப்புறம் வழியாக செய்யப்பட்டுள்ள இந்த பெயர் மாற்றம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் உருவாவதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது நிலங்களை தந்தனர். பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்னமும் ஒப்பந்த தொழிலாளர்களாகவே பணிபுரிந்து வருகின்றனர். இத்தனை பிரச்சனைகள் இருக்கும் நிலையில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்ற பெயரை மாற்றிவிட்டு 'என்.எல்.சி. இந்தியா லிமிடெட்’ என்ற பெயரை வைப்பதற்கான ஒப்புதலை தொழிலாளர்களிடம் மத்திய அரசு கேட்டிருந்தது. வெளி மாநிலங்களிலும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்கங்கள் இருப்பதால் இப்படியான ஒரு நிலைப்பாடு எடுக்கப்பட்டதாக காரணம் சொல்லப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. எனினும், எதிர்ப்புகளை மீறி ‘நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்’ என்ற பெயர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாற்றப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே, இருந்த பெயரை நிர்வாகம் மீண்டும் சூட்டாவிட்டால் மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்'' என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x