

திருச்சி உறையூரில் வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவர் விடுதியை, கட்டி முடிக்கப்பட்டுள்ள சொந்தக் கட்டிடத்துக்கு மாற்றக் கோரி மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி ஆட்சியர் அலுவலக பிரதான நுழைவு வாயில் முன் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் நடத்திய இந்தப் போராட்டத்தில் பல்வேறு கல்லூரிகளில் பயிலும் விடுதி மாணவர்கள் சுமார் 70 பேர் பங்கேற்றனர். ஒரு மாணவர் பாயை எடுத்துவந்து தரையில் விரித்து அதில் படுத்துக் கொண்டார். மேலும், சிலர் பெட்டிகளை எடுத்து வந்திருந்தனர்.
போராட்டம் தொடர்பாக மாணவர்கள் கூறும்போது, “இப்போது விடுதி செயல்படும் கட்டிடம் சேதமடைந்த நிலையில் எந்த நேரத்திலும் அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. மேற்கூரை சரியில்லாததால் மழைக் காலங்களில் அறைகளுக்குள் தண்ணீர் கசிகிறது. மேலும், போதிய இடவசதியின்றி மாணவர்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், போதிய கழிப்பிடம், குளியலறைகளும் இல்லை.
விடுதியில் இருந்து கல்லூரிக்குச் சென்று வர பல்வேறு இடையூறுகள் உள்ளன. எனவே, திருச்சி ஈவெரா பெரியார் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல மாணவர் விடுதிக் கட்டிடத்தை உடனே திறந்து, இந்த விடுதியை அங்கு இடமாற்றம் செய்ய வேண்டும்” என்றனர்.
போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் மாணவர்கள் கோரிக்கை மனுவை அளித்தனர். அவர், விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.