

கோவையில் நெடுஞ்சாலை ஓர மதுக்கடைக்கு நூதனமாக வழி அமைத்து திறக்க முயற்சித்ததை, தடுக்கும் விதமாக மதுக்கடையைச் சுற்றி 6 அடி ஆழத்தில் அகழி வெட்டி பாதையை மறித்துள்ளனர் பொதுமக்கள்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் ஓரத்தில் 500 மீட்டருக்கு உள்ள மதுக்கடைகளை மூட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஏப்.1-ம் தேதி முதல் கோவையில் 153 நெடுஞ்சாலை ஓர மதுக்கடைகள் மூடப்பட்டன. அவற்றுக்கு மாற்று இடம் தேடும் முயற்சிக்கு அனைத்து பகுதிகளிலும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கேரளத்தில் நீதிமன்ற உத்தரவுப் படி மூடப்பட்ட மதுக்கடைக்கு வளைவான பாதைகள் அமைத்து, அதன் தொலைவை 500 மீட்டருக்கு மேல் இருப்பதாகக் காட்டி கடையை திறக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. இதேபோல, கோவை மலுமிச்சம்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையின் ஓரமாக அமைந்துள்ள மூடப்பட்ட மதுக்கடைக்கும் நூதனமாக பாதை அமைத்து அதன் தொலைவை அதிகமாகக் காட்டி திறக்க முயற்சிப்பதாக புகார் எழுந்தது. ஆனால் அரசு தரப்பில் அதைத் தடுக்க நடவடிக்கை ஏதும் எடுக்காததால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், மதுக்கடையைச் சுற்றிலும் அகழி வெட்டி மதுக்கடையின் பாதையை மறித்துள்ளனர்.
போராட்டக்குழுவைச் சேர்ந்த எஸ்.லட்சுமணன் கூறும்போது, ‘மலுமிச்சம்பட்டியில் 2005-ல் மதுக் கடை அமைக்க முயன்றபோது, அருகே பள்ளி, குடியிருப்புகள் இருப்பதை சுட்டிக் காட்டியதால் அத்திட்டம் கைவிடப்பட்டது. ஆனால், எதிர்ப்பை மீறி அடுத்த சில ஆண்டுகளில் அங்கு கடை திறக்கப்பட்டது. அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், டாஸ்மாக் நிர்வாகம் என பல தரப்பிலும் எங்கள் கோரிக்கையை தெரிவித்து வருகிறோம். ஆனால் எந்த பலனும் இல்லை. இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவால், நெடுஞ்சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள இந்த மதுக்கடை மூடப்பட்டது. இதனால் அனைவருமே நிம்மதியாக இருந்தனர்.
இதனிடையே கடந்த 3 நாட்களாக, மதுக்கடைக்கு வரும் பாதையின் தூரத்தை அதிகப்படுத்திக் காட்டுவதற்காக, வளைந்து வளைந்து செல்வதுபோன்ற வழியை ஏற்படுத்தி உள்ளனர். கடையை திறக்கும் வேலைகளும் நடக்கின்றன. இதை டாஸ்மாக் அதிகாரிகளிடம் தெரிவித்தோம். ஆனால் கடையை திறப்பதிலேயே அதிகாரிகளும் உறுதியாக உள்ளனர். எனவே வேறு வழியின்றி, மதுக்கடை வளாகத்தைச் சுற்றியுள்ள மக்கள் ஒன்றிணைந்து அவரவர் இடத்தில் அகழி வெட்டிவிட்டோம். மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியைத் தவிர அனைத்து வழிகளும் அகழியால் அடைபட்டுவிட்டன. பள்ளிக்கான வழியில் மதுக்கடை அமைக்கக்கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்’ என்றார்.
‘3 அடி அகலத்தில், 6 அடி ஆழத்தில் தோண்டப்பட்டுள்ள இந்த அகழியைத் தாண்டி கடைக்குச் செல்ல சிலர் முற்படலாம். ஆனால் கடையில் இருந்து மதுபோதையில் திரும்பி வருவோர் அகழியில் விழுவது நிச்சயம். கடையைத் திறக்க எப்படி முயற்சித்தாலும் அதை தடுப்போம்’ என்கின்றனர் இங்குள்ள மக்கள்.