

திருடனிடமிருந்து திருப்புல்லாணி கோயிலை காத்தவருக்கு சேதுபதி மன்னர் சிலை வைத்து சிறப்பு செய்ததை அரசுப் பள்ளி மாணவி ஆவணப்படுத்தியுள்ளார்.
ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தின் சார்பில் ‘நம்ம ஊரு வரலாறு’ என்ற தலைப்பில் மாணவர் ஆய்வரங்கம் நடைபெற்றது.
திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்த ஆய்வரங்கம் நடைபெற்றது.
இதில் இந்தப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அபிநயா (15). சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த முத்துவீரப்பன் என்பவர் திருப்புல்லாணி கோயிலை பலமுறை கொள்ளையடித்துச் சென்ற திருடனை தனி ஒருவனாய் பிடித்துக் கொடுத்ததற்காக கோயிலில் கல் சிலை வைத்து சிறப்பு செய்யப்பட்டுள்ளதை தொல்லியல் ஆய்வாளரான வே.இராஜகுருவின் வழிகாட்டுதலில், வாய்மொழித் தகவல்கள், களஆய்வு, நேர்காணல், ஊர் பெயராய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இரண்டு மாதங்களாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தியுள்ளார்.
இது குறித்து வியாழக்கிழமை திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ராமநாதபுரம் தொல்லியல் மற்றும் வரலாற்று பாதுகாப்பு மையத்தின் வே. நிறுவனர் ராஜகுரு கூறியதாவது,
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் இருந்து ரெகுநாதபுரம் செல்லும் வழியில் முத்துவீரப்பன் வலசைக்கு அருகில் இடிந்த நிலையில் தற்போதும் ஒரு அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையின் அருகில் உள்ள வலசை என்ற ஊரைச் சேர்ந்த முத்து வீரப்பன் என்பவர் சேதுபதி மன்னரிடம் வேலை செய்து வந்தார். மன்னரின் பேச்சை மறுத்ததால் கோபங்கொண்ட மன்னர், “அறுப்பு சாமை” என்ற தானியத்தை நூறு குறுத்தை (ஏக்கர்) நிலத்தில் விதைத்து அதை அவர் கையாலயே அறுத்து அடித்துக் கொடுக்கவேண்டும் என்ற தண்டனை கொடுத்தார். அனைவரும் எதிர்பார்த்ததைவிட அந்த தண்டனையை மிக எளிதாக முத்து வீரப்பன் செய்ததால் அவரால் தமக்கு ஆபத்து வரலாம் என மன்னர் அவரை சிறையில் அடைத்தார்.
திருப்புல்லாணி கோயிலில் தொடர் திருட்டு
இந்நிலையில் திருப்புல்லாணியில் உள்ள ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலில் தாயார் சிலையில் உள்ள நகைகள் தொடர்ந்து களவாடப்பட்டு வந்தன. இக்கோயிலின் நான்கு திசைகளிலும் நான்கு வாசல்கள் இருந்துள்ளன. இதனால் திருடன் தப்பிச் செல்வது எளிதாக இருந்துள்ளது. திருடனைப் பிடிக்க மன்னர் அதிக ஆட்களை நியமித்தார். ஆனாலும் திருட்டு தொடர்ந்து நடந்தது. அவர்களால் திருடனைப் பிடிக்க முடியவில்லை.
முத்துவீரப்பனின் முன்னோர்கள் திருப்புல்லாணி கோவிலுக்கு பற்றுரிமை உடையவர்கள். அக்கோயில் இறைவனை தங்கள் குல தெய்வமாக வழிபட்டவர்கள். எனவே அத்திருடனைப் பிடிக்கும் வாய்ப்பை தனக்குத் தருமாறு முத்துவீரப்பன் மன்னரிடம் கேட்டார். பதிலுக்கு மன்னர் யாராலும் பிடிக்க முடியாத திருடனை நீ பிடித்து விட்டால், இந்தக் கோவில் உள்ள மட்டும் உன் பெயர் சொல்லும் விதத்தில் உன் சிலையை இக்கோயிலில் வைத்து உன்னைப் பெருமைப்படுத்துகிறேன், என்றார்.
கோயிலின் மேற்கு வாசல் கதவுக்குப் பின்னால் மறைந்து நின்ற முத்துவீரப்பன், நகை திருட வந்த சங்கிலி என்ற திருடனைப் பிடிக்க முயற்சித்த போது அவன் தப்பி ஓடிவிட்டான். 3 கி.மீ. தூரம் துரத்திச் சென்ற அவர் ஆனைகுடி உப்பளத்து ஓடை அருகில் வைத்து தப்பிக்க முடியாத அளவிற்கு அவன் கொண்டைமுடியைப் பிடித்துக் கொண்டார். அங்கு நடந்த சண்டையில் அந்த இடத்திலேயே திருடன் கொல்லப்பட்டான். இதனால் கோயிலுக்கு இருந்த திருட்டுப் பயம் நீங்கியது.
மன்னர் சிறப்பு செய்தல்
திருடனைப் பிடிக்க உதவிய முத்துவீரப்பனுக்கு ஆதி ஜெகநாத பெருமாள் கோவிலின் காவல் பொறுப்பை சேதுபதி மன்னர் வழங்கினார். தேர்த் திருவிழாவின் போது, தேர் வடத்தைத் தொட்டு வணங்கி முதலில் இழுக்கும் கௌரவத்தையும் அவருக்கு வழங்கினார். அவர் மறைந்த பின்பு மன்னர் அளித்த வாக்குப்படி அவருக்கு கோயிலில் சிலை வைத்து சிறப்பித்துள்ளார். அவர் குடியிருந்த வலசை என்ற ஊர் அவர் பெயரில் முத்துவீரப்பன் வலசை என மாற்றப்பட்டது.
முத்துவீரப்பனுக்கு மன்னர் அமைத்த சிலை தற்போது திருப்புல்லாணி கோயிலில் தாயார் சன்னதியின் வெளிப்பகுதியில் நந்தவனத்தின் உள்ளே தற்போதும் உள்ளது. அவர் மறைந்திருந்து திருடனைப் பிடித்த இடத்திலேயே சேதுபதி மன்னர் அச்சிலையை நிறுவியிருப்பதாகத் தெரிகிறது, என்றார் தொல்லியல் ஆய்வாளரர் வே. ராஜகுரு.
வெளி உலகுக்குத் தெரியாத முத்துவீரப்பன் வரலாறையும் அவருக்கு பெருமை செய்யும் விதமாக கோயிலில் அவருக்கு சேதுபதி மன்னர் சிலை அமைத்ததையும் ஆவணப்படுத்திய மாணவி அபிநயாவை திருப்புல்லாணி அரசு மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மு.பிரேமா உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.