Last Updated : 13 Jan, 2014 05:37 PM

 

Published : 13 Jan 2014 05:37 PM
Last Updated : 13 Jan 2014 05:37 PM

புரட்சித் தலைவி கொடுத்துள்ள விலைமதிப்பில்லா பொங்கல் பரிசு: விருது கிடைத்தது பற்றி பண்ருட்டி ராமச்சந்திரன்

விலை மதிப்பில்லாத பொங்கல் பரிசாக அண்ணா விருதை புரட்சித் தலைவி அளித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி’ என்று பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி சேர முக்கிய காரணியாக இருந்தவர் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தேர்தல் முடிந்த ஒரு சில மாதங்களிலேயே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. விஜயகாந்தின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியில் இருந்து வந்த பண்ருட்டி ராமச்சந்திரன், கடந்த மாதம் 10-ம் தேதி தேமுதிகவில் இருந்து விலகினார். எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார். இந்நிலையில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தமிழக அரசு சார்பில் அண்ணா விருதை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.

விருது கிடைத்தது குறித்து ‘தி இந்து’வுக்கு பண்ருட்டி ராமச்சந்திரன் திங்கள்கிழமை அளித்த சிறப்புப் பேட்டி:

கே: தமிழக அரசு விருது கிடைத்தது பற்றி?

ப: இந்த விருது எனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க வில்லை. அண்ணா காலத்தில் அவருடன் பேசி, பழகியவர்களில் ஒரு சிலர்தான் இன்று இருக்கின்றனர். அவர்களில் எனக்கு அண்ணா விருதினை தமிழக அரசு சார்பில் முதல்வர் புரட்சித் தலைவி வழங்கியுள்ளது எனக்குக் கிடைத்த பெரும் பேறாகும். அதற்காக புரட்சித் தலைவிக்கு நன்றி. அண்ணா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நான் 1956-ல் உதவி மின்பொறியாளராக இருந்தபோது, அண்ணாதான் அந்தப் பணியை ராஜினாமா செய்யச் சொல்லி என்னை அரசியலுக்கு அழைத்து வந்தார். ராஜ்யசபாவில் அண்ணா ஆற்றிய உரையை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளேன். தற்கால அரசியலை, ‘சாமானிய மக்களின் சகாப்தம்’ என்று அண்ணா சொல்லியிருக்கிறார். அதற்கேற்ப, இன்றைக்கு புரட்சித்தலைவி தலைமையில் சாமானியர்களின் ஆட்சி நடக்கிறது. அதன் அடையாளம்தான் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த விருது.

புரட்சித் தலைவி எனக்கு அளித்த விலை மதிக்க முடியாத பொங்கல் பரிசாக இதை கருதுகிறேன். நாடாளுமன்றத் தேர்தலுக்காக அதிமுக எடுத்துள்ள அரசியல் நிலைப்பாடு நாட்டு நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாக கருதுகிறேன்.

அதிமுகவில் சேருவீர்கள் என்று பரவலாக கருத்து நிலவுகிறதே?

என்னால் உடல்ரீதியாக ஓடியாடி உழைக்க முடியாது. என்றாலும், தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது பங்கை ஆற்றுவேன்.

அப்படியானால் அதிமுகவில் சேருகிறீர்களா?

அந்தக் கேள்வி எழவில்லை.

முதல்வர் ஜெயலலிதா அழைத்தால் சேருவீர்களா?

அதுபற்றி அப்போது பார்க்க லாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x