

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு ஆதரவளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு பல தொகுதிகளில், வாக்காளர்கள் எதிர்ப்புத் தெரிவித்த வண்ணம் உள்ளனர். விருத்தாசலம் எம்எல்ஏ அலுவலகத்தில் புகுந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஜெயலலிதா உருவப்படத்தை சேதப்படுத்தியும், தொகுதி மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட எம்எல்ஏ கலைச்செல்வனுக்கு எதிராகவும் நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து அவரது அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலரும், உளுந்தூர்பேட்டைத் தொகுதி எம்எல்ஏவுமான குமரகுருவுக்கு தொகுதிவாசிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவரது சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் தொடர்ந்து பூட்டப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தும், பதில் கிடைக்கவில்லை.
இதனிடையே கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அலுவலகத்தை நேற்று முன் தினம் சிலர் முற்றுகையிட்டு கோஷமிட்ட நிலையில், நேற்று அலுவலகத்திற்குச் சென்ற எம்எல்ஏ பிரபு, நேற்று தனது அலுவலகத்தில் தொகுதி மக்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: மக்களிடம் எனக்கு வரவேற்பு உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தை சிறப்பாகக் கொண்டாட இருக்கிறோம். அதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளையும், தொகுதி மக்களையும் சந்திக்க இருக்கிறோம் என்று தெரிவித்தார்.