Published : 17 Jan 2017 10:51 AM
Last Updated : 17 Jan 2017 10:51 AM

ஜல்லிக்கட்டுக்காக சட்ட திருத்தம் கோரி மத்திய அரசுக்கு எதிராக பாஜக நிர்வாகிகள் போராடுவார்களா?- பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட பாஜக நிர்வாகிகள் முன்வருவார்களா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது: ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாததால் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் கவலை அடைந்துள்ள நிலையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆண்ட கட்சிகளும் ஆளும் கட்சிகளும் ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலங்களில் பலமுறை சுட்டிக்காட்டியதைப் போலவே ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு தடை விதிக்கக் காரணமாக இருந்தவை திமுகவும், காங்கிரஸும்தான். எத்தனை நாடகங்களை நடத்தினாலும், எத்தனை போராட்டங்களை நடத்தினாலும் இதை மறைக்க முடியாது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தவோ, அதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் தரவோ அதிமுக அரசு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்புவரை ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதிலிருந்து தமது அரசு பின்வாங்காது என்று கூறிய முதல்வர் என்னவானார் என்பதே தெரியவில்லை.

இன்னொருபுறம், தமிழகத்திலி ருந்து மத்திய அமைச்சராக இருக்கும் பொன். ராதாகிருஷ்ணன் அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி கள் நடக்கும் என கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே கூறி வந்தார். ஆனால், கடந்த இரு ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை என்றதும் மன்னிப்பு கேட்டுவிட்டு பதுங்கிக் கொண்டார். ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்பதுதான் தங்களின் விருப்பம்; அதற்காக தடையை மீறுவதில் கூட தவறில்லை என்று பாஜக தலைவர்கள் கூறிவருகின்றனர்.

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, அவரது வீட்டுக் காளையை அவிழ்த்து விட்டு தடையை மீறியிருக்கிறார். அவர்கள் கூறுவது நடிப்பல்ல, உண்மையெனில் அடுத்த சில வாரங்களிலாவது ஜல்லிக்கட்டு நடத்த என்ன செய்யப் போகிறார்கள்? மக்களின் உணர்வுகளை மதித்து, ஜல்லிக்கட்டுக்காக சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்களுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக போராட முன்வர வேண்டும். அவர்கள் செய்வார்களா?

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x