Published : 28 Aug 2016 02:03 PM
Last Updated : 28 Aug 2016 02:03 PM

மின் வாரியத்தை நட்டத்தில் வீழ்த்தும் காரியமே நடக்கிறது: கருணாநிதி விமர்சனம்

தமிழ்நாடு மின் வாரியத்தை நட்டத்தில் வீழ்த்தும் காரியமே நடைபெறுகிறது என்று திமுக தலைவர் கருணாநிதி விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர், ஜெயலலிதா, மின்சார வாரியத்தையே தி.மு.கழக ஆட்சி தான் குட்டிச் சுவராக்கியது என்று அப்பட்டமான பொய்யைக் கூறியவுடன், மின்வாரியம் குட்டிச் சுவரானது அதிமுக ஆட்சியிலே தான் என்று 5-8-2016 அன்று உண்மை விபரங்களின் அடிப்படையில் விரிவாகப் பதில் தந்திருந்தேன். ஆனால் ஜெயலலிதாவோ, அந்தத் துறையின் அமைச்சரோ இந்நாள் வரை நான் எடுத்துக் கூறியதற்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லவில்லை

31-12-2015 தேதிய “தி இந்து” ஆங்கில நாளிதழில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தனது நிதிச்சுமை குறித்து அதிகக் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. ஆம்; குறைந்த விலைக்கு மின்சாரம் கிடைக்கும் போதும், அதிக விலை கொடுத்து அக்கழகம் மின்சாரத்தை வாங்குகிறது” என்று வெளி வந்த குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேன். அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பதற்கு இதுவரை பதில் இல்லை.

தமிழ்நாடு மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர் திரு. எஸ். நாகல்சாமி அவர்களே, “மின்சாரத்தைக் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்கிற ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை” என்று குற்றஞ்சாட்டியிருக்கிறாரே, ஆதாரப் பூர்வமான அந்தக் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டிருந்தேன். பதிலே இல்லை. அ.தி.மு.க. அரசில் முறையாக முடிவுகள் மேற்கொள்ளப் பட்டிருந்தால் அல்லவா, அந்த முடிவுகளை நியாயப்படுத்தி நேர்மையான பதில் சொல்ல முடியும்?

“ஆனந்த விகடன்” வார இதழில், தமிழ்நாடு மின் துறை பொறியாளர் சங்கத் தலைவர், சா. காந்தி கூறும்போது, “தனியாரிடமிருந்து மின்சாரத்தை கூடுதல் விலை கொடுத்து வாங்கியதால், மின்சார வாரியத்தின் இழப்பு அதிகமாகி விட்டது. வருடம்தோறும் பெரும் இழப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒரே மின்சார வாரியம், இந்தியாவிலேயே தமிழக மின் வாரியம் மட்டும்தான்” என்றெல்லாம் அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தாரே, அதற்கு என்ன விளக்கம் என்று கேட்டிருந்தேன். விளக்கத்தை பலத்த போலீஸ் பாதுகாப்போடும், உளவுத் துறையின் உதவியோடும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் போலும்! விளக்கம் எப்படிக் கிடைக்கும்? இருட்டறை யில் கருப்புப் பூனையைத் தேடியலைந்த கதை தான்!

“ஆனந்த விகடன்” இந்த ஆண்டு ஜனவரியில் எழுதிய தலையங்கத்தில், “கடந்த ஐந்தாண்டுகளில் தன் சொந்த மின் உற்பத்தித் திறனை ஒரு யூனிட் அளவுக்குக் கூட மேம்படுத்தாத மின்சார வாரியம், புதிய புதிய வகைகளில் ஊழல் செய்வதற்கு மட்டும் திட்டங்களை வகுக்கிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஊழலின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது” என்று கடும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்ததே அதற்கு என்ன பதில் என்று கேட்டேன். இவன் யார் கேட்க, நான் என்ன பதில் கூற என்று நினைத்து விட்டார்களோ, அல்லது வெட்கக் கேட்டை ஏன் வெளியே காட்டிக் கொள்ள வேண்டுமென்று இருந்து விட்டார்களோ தெரியவில்லை!

4-7-2015 அன்று தமிழக அரசு அதானி குழுமத்துடன் ஒரு யூனிட் ரூபாய் 7.01 என்ற விகிதத்தில் 25 ஆண்டுகளுக்கு மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தம் முடிந்த இரண்டே வாரங்களில், மத்தியப் பிரதேச அரசு சூரிய ஒளி மின்சாரம் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்தபோதுதான் குற்றச்சாட்டுகள் கிளம்பின. மத்திய பிரதேச அரசுக்கு ஒரு யூனிட் ரூபாய் 6.04 என்ற விலையில் சூரிய ஒளி மின்சாரம் வழங்க இதே அதானி நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. ஆனால் அதானி நிறுவனத்தின் இந்த விலைப்புள்ளியை நிராகரித்த மத்தியப் பிரதேச அரசு, மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்கை பவர் சவுத் ஈஸ்ட் ஏஷியா என்ற நிறுவனத்தோடு, ஒரு யூனிட் 5.05 என்ற விலையில், 25 ஆண்டுளுக்கு மின்சாரம் வாங்க ஒப்புதல் அளித்தது உண்மையா இல்லையா என்று கேள்வி கேட்டிருந்தேன். எந்தப் பதிலும் இல்லை. மத்தியப் பிரதேசத்தில் செல்லுபடி யாகாத அதானி குழுமம், தமிழகத்தில் மட்டும் செல்லுபடியானதன் ரகசியம் என்னவென்ற உள்ளங்கை நெல்லிக்கனியென அனைவருக்கும் இப்போது தெரிந்து விட்டதே!

இதற்கிடையே 26-8-2016 தேதிய “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில் “Tangedco gets nod to buy power - 11 Firms to supply power at Rs. 4.91/unit” என்ற தலைப்பில் ஒரு செய்தி வந்துள்ளது. அதன்படி, ஏற்கனவே ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட தொகையை விடக் குறைந்த தொகைக்கு, அதாவது ஒரு யூனிட் ரூபாய் 4.91 என்ற விலைக்கு 11 தனியார் கம்பெனிகளிடமிருந்து வாங்க தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம், தமிழக மின் வாரியத்திற்கு தனது ஒப்புதலை வழங்கியுள்ளது என்பது தான் அந்தச் செய்தியாகும். தற்போது செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தப்படி, 2012 ஆம் ஆண்டு முதல் பதினைந்து ஆண்டுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு நான்கு ரூபாய் 91 பைசா என்ற விகிதத்தில் மின்சாரம் வாங்கப்படும் என்பது தான். ஆனால் இந்த விலை பற்றி மின் தொழிலிலே உள்ள விற்பன்னர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் “டைம்ஸ்” நாளேடு எழுதியுள்ளது.

“Power experts say that Rs. 4.91 per unit is high, compared to what is available in the Electricity Exchange. “Power now is available in the exchange of Rs. 2.40 per unit. There is no problem in transferring power from one State to another with better transmission lines. Hence, Tangedco can purchase power at half the cost” said an exchange official. அதாவது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு ரூ. 4.91 என்பது அதிகமான விலையாகும். மத்திய மின் தொகுப்பில் இதை விட மிகக் குறைந்த விலைக்கு ஒரு யூனிட் ரூ. 2.40க்கு மின்சாரம் கிடைக்கிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு மின்சாரம் எடுத்துச் செல்வதற்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் நாடு மின்சார வாரியம் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 4.91 என்பதில் பாதி விலையில் மத்திய மின் தொகுப் பிலிருந்து ஒரு யூனிட் ரூ. 2.40க்கு வாங்குவதற்கான வசதி இருக்கிறது. ஒரு யூனிட் ரூ. 2.40க்குக் கிடைக்கும் நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் ரூ. 4.91க்கு அதாவது இரண்டு மடங்கு விலை கொடுத்து 11 தனியார் மின்சார நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்க முடிவெடுத்திருப்பது; தமிழ்நாடு மின் வாரியத்தின் நலனைக் காப்பாற்றவா அல்லது வேறு யாராவது தனி நபரின் கஜானாவை நிரப்பிக் கொள்ளவா என்ற சந்தேகத்தை சாமான்யர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது! தமிழ்நாடு மின் வாரியத்தைத் தொடர்ந்து நட்டத்தில் மூழ்கடிக்கும் காரியங்களே முனைப்போடு நடைபெற்று வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், தமிழ்நாடு மின் வாரியத்தை அகழ்வாராய்ச்சி செய்து தான் மீட்க முடியும் போலிருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x