

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக மாநில உள்துறைச் செயலாளரின் நேரடி கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுக்கவும், தற்காலிக முதல் வர் அலுவலகமாகவும் பயன் படுத்திய கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங் கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. ஓம் பகதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டுள்ளார். கிருஷ்ண பகதூர் என்ற காவலாளி படுகாயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையும், அடுத் தடுத்து நடைபெறும் நிகழ்வுகளும் திரைப்படங்களில் வரும் திரில்லர் காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு அமைந்துள்ளன.
காவல் துறையினர் கூறுவது போல வெறும் கைக்கடிகாரங்களை கொள்ளையடிக்க வந்தார்கள் என்றால் காவலாளியை ஏன் கொல்ல வேண்டும்? இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், அவருக்கு உதவியாக இருந்த சயன் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் விபத்தில் சிக்கியது எப்படி? பளிங்கு கற்களை பத்திரமாக வைத்திருந்தவர்கள், கைக்கடிகாரங்களை ஆற்றில் ஏன் தூக்கி வீசினார்கள்? என பல கேள்விகள் எழுகின்றன.
விபத்தில் மரணமடைந்த கார் ஓட்டுநர் கனகராஜ், முதல்வர் பழனி சாமியின் நெருங்கிய உறவினர் என வெளிவந்த செய்திகளை புறந்தள்ளிவிட முடியாது. கனக ராஜின் சகோதரர் தனபால் ஊடகங் களுக்கு அளித்த பேட்டியில், ‘‘விபத்து நடந்த இடத்தை நேரில் பார்த்தேன். விபத்து நடந்ததற் கான எந்த அறிகுறியும் தென்பட வில்லை. கனகராஜ் திட்டமிட்டு கொல்லப்பட்டதுபோல தெரிகிறது’’ என கூறியுள்ளார்.
இதிலிருந்து கோடநாடு விவகாரத்தில் அவிழ்க்க முடியாத பல மர்ம முடிச்சுகள் இருப்பது தெளிவாகிறது. அங்கு கொள்ளை போனது கைக்கடிகாரங்களா, சொத்து ஆவணங்களா அல்லது விலை மதிக்க முடியாத பொருட் களா என்பது பற்றி தீவிர விசா ரணை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தமிழக காவல் துறைக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே, இதுகுறித்து ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள நேர்மையான அதிகாரி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த விசாரணை அனைத்தும் மாநில உள்துறைச் செயலாளரின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும். சம்பந்தப் பட்ட குற்றவாளிகள் மீண்டும் விபத்தில் சிக்கி விடாமல் தடுத்து உடனடியாக அவர்களைக் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.