

பார்க் ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் எடுக்கப்படும் டிக்கெட்டில் நேரம் தவறாக குறிப்பிடப்படுகிறது. இதனால் பயணிகள் தர்மசங்கடத்துக்கு ஆளாகின்றனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பஸ்களைவிட ரயில் பயணத்தைத்தான் பொதுமக்கள் பெரிதும் விரும்புகின்றனர். காரணம் கட்டணம் குறைவு என்பதுடன், பாதுகாப்பு அதிகம். இதனால், அனைத்து ரயில் நிலையங்களிலும் காலை, மாலை வேளைகள் மட்டுமின்றி அனைத்து நேரங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. டிக்கெட் வாங்க கவுன்ட்டர்களில் மிக நீண்ட வரிசை காணப்படுகிறது.
பயணிகளின் நலன் கருதி, ரயில்வே நிர்வாகம் தானியங்கி டிக்கெட் வழங்கும் (ஏ.டி.வி.எம்.,) இயந்திரங்களை ரயில் நிலையங்களில் நிறுவியுள்ளது. ஆனால், அவை அடிக்கடி பழுதடைந்து விடுவதால் பயணிகளுக்கு பயன் கிடைப்பதில்லை.
சென்னை பார்க் ரயில் நிலையத்தில் வைத்துள்ள தானியங்கி இயந்திரத்தில் டிக்கெட் எடுத்தால் பயண நேரம் தவறாக குறிப்பிடுகிறது. இதுகுறித்து, பயணி ஒருவர் கூறியதாவது:
புத்தாண்டு தினத்தன்று திரிசூலம் செல்வதற்காக பார்க் ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரம் மூலம் டிக்கெட் எடுத்தேன். மதியம் 3.10 மணிக்கு டிக்கெட் வாங்கினேன். ஆனால், டிக்கெட்டில் 2.32 மணி என நேரம் பதிவாகியிருந்தது. 3.25 மணிக்கு ரயிலில் ஏறினேன்.
புறநகர் ரயில் டிக்கெட்டைப் பொறுத்தவரை, வாங்கிய ஒரு மணி நேரத்துக்குள் பயணம் செய்ய வேண்டும். இல்லையெனில், டிக்கெட் காலாவதியாகி விடும். நான் எடுத்த டிக்கெட்டில் 40 நிமிடம் குறைவாக பதிவாகி இருந்தது. அதனால், டிக்கெட் வாங்கி 40 நிமிடம் காலதாமதமாக பயணம் செய்ததுபோல் உள்ளது. இதுபோன்ற நேரத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் கேட்கும் தர்ம சங்கடமான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அத்துடன், சில பரிசோதகர்கள் டிக்கெட் வாங்கி காலதாமதமாக பயணம் செய்ததாகக் கூறி, கருணை இல்லாமல் அபராதம் விதிக்கவும் நேரிடும்.
எனவே, ரயில்வே அதிகாரிகள் தானியங்கி இயந்திரங்களை அடிக்கடி சர்வீஸ் செய்து சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். அப்போதுதான் பயணிகளுக்கு சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
இவ்வாறு அந்த பயணி கூறினார்.