Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

அதிமுக என்ற எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ஆக மாறும்: ஜெயலலிதா பேச்சு

அ.தி.மு.க என்ற எக்ஸ்பிரஸ் ரயில், டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயிலாக மாறும். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க முழுமையான வெற்றியை பெற்றால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் சென்னை அருகே உள்ள வானகரத்தில் வியாழக்கிழமை நடந்தது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது:

மத்திய அரசு பல்வேறு வழிகளிலும் தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மின்சாரம் வழங்குதல், காவிரி பிரச்சினையில் நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிடுதல் உட்பட பல்வேறு பிரச்சினைகளில் உச்ச நீதிமன்றத்தின் மூலமே நமது உரிமைகளை பெற வேண்டிய நிலை இருந்தது.

மத்திய அரசை தூக்கி எறிய வேண்டும்

மத்திய அரசு தமிழகத்தை திட்டமிட்டு எந்தெந்த வழிகளிலெல்லாம் பழிவாங்குகிறது என்று விவரித்தால், அதற்கு ஒரு நாள் போதாது. இந்த நேரத்தில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால், தமிழகம் பிழைப்பதற்கும், வளம் பெற்று முன்னேறு வதற்கும் சட்டப் பூர்வமான உரிமையை பெறுவதற்கும் தற்போதுள்ள மத்திய ஆட்சி தூக்கி ஏறியப்பட வேண்டும். தமிழகத்திற்கு நேசக் கரம் நீட்டும் மத்திய அரசு அமையவும், தமிழகத்தை ஒரு பங்கு தாரர் என உணர்ந்து ஆதரவு மற்றும் உதவி செய்யும் மத்திய அரசு அமைய வேண்டும்.

40 தொகுதிகளிலும் வெற்றி

மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தான் இந்திய மக்களுக்கு மத்திய அரசு தரும் பரிசுகளாகும். ஊழல், பணவீக்கம், விலைவாசி உயர்வு, கருப்பு பணம் பதுக்கல் போன்றவைகளால் இந்திய பொருளாதாரம் சீர் குலைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்து இருக்கிறது. சிறிய, நாடுகள் கூட, இந்தியாவை மிரட்டுவதால், செய்வதறியாமல் மத்திய அரசு கையைப் பிசைந்து கொண்டு இருக்கிறது.

மத்தியில் வலிமையான ஆட்சி அமைந்தால்தான் அண்டை நாடுகள் அடங்கும். இந்திய பொருளாதாரத்தை சீர்ப்படுத்தி, மக்கள் இன்னல்களில் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு அடுத்த அமைய இருக்கும் மத்திய அரசுக்கே இருக்கிறது. இந்த சூழ்நிலையில், வரும் நாடாளுமன்ற மக்களவை பொது தேர்தலில் அ.தி.மு.க முழுமையான வெற்றியை பெற்றால் மட்டுமே, நாட்டின் வளர்ச்சியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதியிலும், அ.தி.மு.க தனித்து நின்று வெற்றி பெற வேண்டும் என்பதே நம் இலக்கு. இது குறித்து இந்த பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் கூட்டணி வியூகங்களை அமைக்கவும், தேர்தல் குறித்து அனைத்து முடிவுகளை எடுக்கவும் எனக்கு முழு அதிகாரத்தை வழங்கி இருக்கிறீர்கள். என் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதற்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சிக்கு எது நன்மையோ, அதை மட்டுமே நான் செய்வேன்.

வெற்றி கனியை பறிக்க வேண்டும்

நாம் செய்த சாதனைகள் ஏராளம். அதை பட்டி, தொட்டிகளில்லெல்லாம் எடுத்து சொல்லி எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான களப்பணிகளை நீங்கள் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். வெற்றிக் கனியை பறிக்க வேண்டும். அப்போது தான் நாம் விரும்பும் மத்திய அரசு அமையும். தமிழகத்திற்கு தேவையானதை இந்திய அரசிடமிருந்து பெற முடியும். அது உங்களால் முடியும் என்று நான் நம்புகிறேன். உங்கள் மீது 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது. ஏற்காடு இடைத்தேர்தலில் கட்சியில் உள்ள அனைவரும் முழு மூச்சுடன் களப்பணி யாற்றியதால், 78,116 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம்.

டெல்லி செங்கோட்டை எக்ஸ்பிரஸ்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதே அர்ப்பணிப்பு உணர்வுடன் களப்பணியாற்ற வேண்டும். அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நம் கட்சியின் பொதுக் குழு கூட்டம் கூடும் போது, இந்த நாட்டையே வழி நடத்தும் சக்தியாக அ.தி.மு.க இருக்க வேண்டும். அ.தி.மு.க என்ற எக்ஸ்பிரஸ் ரயில், புனித ஜார்ஜ் கோட்டையை 6 தடவை வெற்றிகரமாக சென்று அடைந்திருக்கிறது.

இந்த ரயில் வரும் 2014 நாடாளுமன்ற தேர்தலில் டெல்லி செங்கோட்டை ரயிலாக மாறும். டெல்லி செங்கோட்டை எனும் இலக்கை அடைய இந்த ரயிலுக்கு பச்சைக் கொடி காட்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் தயாராகிவிட்டனர். அந்த ரயிலில் இன்ஜின் டிரைவராக நான் இருப்பேன். அந்த ரயிலில் உள்ள வேட்பாளர்களை டெல்லிக்கு கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. நாம் விரும்புவது போல், மக்கள் வாக்களித்தால், அவர்களுக்கு நாடு நலம் பெற, அமைதி, வளம், வளர்ச்சி ஆகியவற்றை செய்து கொடுப்போம் என்பதே தேர்தல் வாக்குறிதியாக இருக்கும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x