கால்டாக்ஸி கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

கால்டாக்ஸி கட்டணத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

கால் டாக்ஸி கட்டணத்தை ஒழுங்கு படுத்தி, அவற்றில் மீட்டர் பொருத்தி, நியாயமான கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை 8 வாரத்துக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கே.சஞ்சீவிநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கால் டாக்ஸிகள் இயக்கப்படுகின்றன. சுமார் 50 ஆயிரம் குடும்பங்கள் இத்தொழிலை நம்பியுள்ளன. 10 லட்சம் மக்கள் கால் டாக்ஸி சேவையைப் பெற்று வருகின்றனர்.

பொதுமக்களிடம் சேவை வரி வசூலிக்கும் சில ஏஜென்ஸிகள், அத்தொகையை அரசுக்கு செலுத்துவதில்லை. கால் டாக்ஸிகளில் கட்டண மீட்டர் பொருத்தாதவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிக்கின் றனர்.

கால் டாக்ஸி தொழிலில் ஈடுபட்டுள்ள சில சர்வதேச நிறுவனங்கள் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரம் கொடுத்து இத்தொழில் நடத்துவதால், உள்ளூர் கால் டாக்ஸிக்காரர்கள் தொழிலை நடத்த முடியாத அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆட்டோக்களில் மீட்டர் பொருத்தி, அதன் கட்டணத்தை ஒழுங்குபடுத்தியதுபோல, கால் டாக்ஸிகளிலும் மீட்டர் பொருத்தவும், நியாயமான கட்டணம் வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும்.

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர் ஆகியோரிடம் கடந்த ஆண்டு ஜூலை 9-ம் தேதி கோரிக்கை மனு கொடுத்தேன். அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த மனுவைப் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர். மகாதேவன் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து, மனுதாரரின் மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in